ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தயாரிப்பு நிறுவனம்

By செய்திப்பிரிவு

மும்பை: மிருணாள் தாக்குர், இஷான் கட்டர் நடித்து, அமேசான் பிரைமில் கடந்த 10-ம் தேதி வெளியான இந்திப் படம் 'பிப்பா'. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இதில் பிரபல வங்கமொழி எழுச்சி கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் ‘கரார் ஓய் லூஹோ கோபட்'என்று தொடங்கும் பாடலை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் மறு உருவாக்கம் செய்திருந்தார் ரஹ்மான். இதற்கு நஸ்ருல் இஸ்லாம் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தாளம் மற்றும் ட்யூனை மாற்றி பாடலை உருவாக்கிய விதம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து நஸ்ருலின் பேத்தி அனிந்திதா காஸி அனுப்பியுள்ள செய்தியில், “பாடலை இப்படி மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக படத்தில் இருந்தும் பொதுத் தளத்தில் இருந்தும் நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ராய் கபூர் பிலிம்ஸ் இதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளது. “முறையான அனுமதி பெற்றே அந்தப் பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். வங்கதேச விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சுதந்திரம், அமைதி மற்றும் நீதிக்கான அவர்கள் போராட்டத்தின் உணர்வுகளை மனதில் கொண்டும் அந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. பாடலை மாற்றியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. ஆனால், இதை நஸ்ருல் இஸ்லாமின் பேரனும் பேத்தியும் ஏற்க மறுத்துவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE