“நான் இருண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர்” - நவாசுதீன் சித்திக்

By செய்திப்பிரிவு

மும்பை: ரொமான்டிக் காமெடி கதாபாத்திரங்களை விட இருண்ட, கதாபாத்திரங்களில் தான் நடிப்பதையே பார்வையாளர்கள் விரும்புவதாக நடிகர் நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். ’கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’, ‘மன்ட்டோ’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஹட்டி’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து பாராட்டை பெற்றார்.

அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நவாசுதீன் கூறியதாவது: “ரொமான்டிக் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதை விட அடர்த்தியான, இருண்ட கதாபாத்திரங்களிலேயே நான் நடிப்பதை பார்வையாளர்கள் விரும்புகின்றனர். இயக்குநரின் ஆய்வு மற்றும் முன்தயாரிப்பு காரணமாக அப்படியான கதாபாத்திரங்கள் நன்றாக அமைந்து விடுவதுண்டு. ஆனால், இலகுவான பாத்திரங்கள் என்று வரும்போது, அவை சரியாக எழுதப்படுவதில்லை. ’ஹட்டி,’ ‘மன்ட்டோ’, ’கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர்’ போன்ற படங்களில் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை. திடமானவை. அதனால், பார்வையாளர்கள் அதனை நேசிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்”. இவ்வாறு நவாசுதீன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE