துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் பழங்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறார், ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்). 30 ஆண்டுகள் கழித்து பெண்கள் சிறையின் ஜெயிலராக இருக்கும் அவர் மகன் ஆஸாத் (ஷாருக்கான்) ஆறு கைதிகளின் துணையுடன், அரசியல் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் காளியின் (விஜய் சேதுபதி) மகள் பயணிக்கும் மெட்ரோ ரயிலை கடத்துகிறார். இதன் மூலம் காளியிடமிருந்து பெரும் பணம் பெற்று, விவசாயிகளின் கடனை அடைக்கிறார். அதேபோல் சுகாதாரத் துறை அமைச்சரைக் கடத்தி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வைக்கிறார். காவல்துறை அதிகாரியான நர்மதா (நயன்தாரா), அவர் குறித்த உண்மை தெரியாமல் திருமணம் செய்துகொள்கிறார். இருவரும் காளியின் அடியாட்களால் கடத்தப்பட, அப்போது விக்ரம் ரத்தோர் தனது ஆட்களுடன் வந்து காப்பாற்றுகிறார். இதற்கிடையே மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்கிறார் காளி. அதற்கு ஏற்ப இந்தியத் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான சதியிலும் ஈடுபடுகிறார். ஆஸாத்தின் கடத்தல் செயல்களுக்கான பின்னணி என்ன? விக்ரமுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இருவரும் சேர்ந்து காளியின் சதியை முறியடித்தார்களா, இல்லையா? என்பது மீதிக் கதை.
தமிழில் 4 வெற்றிப் படங்களை இயக்கிவிட்டு பாலிவுட்டில் ஷாருக்கான் என்னும் உச்ச நட்சத்திரத்துடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் அட்லீ. தன் பாணியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளைக் கலந்து கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். அட்லீயும் ரமணகிரிவாசனும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்கள்.
ஷாருக்கான், தந்தை - மகன் என 2 வெவ்வேறு வேடங்களில் அசத்தும் வகையில் கதையை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அட்லீ. சண்டைக் காட்சிகள் அபாரமான முறையில் படமாக்கப்பட்டு ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது, பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் குழந்தைகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது, அரசின் ஆயுதக் கொள்முதலில் நடக்கும் ஊழலால் தரமற்ற ஆயுதங்களை ஏந்திய ராணுவ வீரர்கள் போர்முனையில் உயிரிழப்பது, தேசத்தைக் காக்கும் வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ஊழல்வாதிகளின் சதியால் தேசத் துரோக முத்திரை குத்தப்பட்டு பலியாக்கப்படுவது என பல சமூகஅவலங்களையும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உணர்வுபூர்வமாக அமைத்திருக்கிறார் அட்லீ.
» திரை விமர்சனம்: தமிழ்க்குடிமகன்
» பாலும் பழமும்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
ஆனால் இந்தி ரசிகர்களுக்கு இவை புதுமையாக இருக்கலாம். தமிழில் பல படங்களில் பார்த்துச் சலித்த காட்சிகள்தான். இந்தக் காட்சிகள் சமகால சமூக அவலங்களைப் பேசுகின்றன என்பதைத் தாண்டி அதன் உள்ளடக்கமோ வசனங்களோ வலுவான தாக்கம் செலுத்தத் தவறுகின்றன. அதேபோல் நாயகனுக்கான மாஸ் காட்சிகளிலும் நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதல் காட்சிகளிலும் புதுமையாக எதுவும் இல்லை. வில்லன் கதாபாத்திரம் பலவீனமாகவும் நாயகன் கதாபாத்திரம் சூப்பர் ஹீரோவாகவும் ஒற்றைப்படையாக உருவாக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
இதை தாண்டி காட்சிகளின் பிரம்மாண்டம், நடிகர்களின் ஒத்துழைப்பு, வண்ணமயமான செட்கள், பெண் சிறைக்கைதிகளை நல்ல நோக்கத்துடன் கூடியகடத்தல் பணியில் ஈடுபடுத்துவது என சின்ன சின்ன புத்திசாலித்தனமான ஐடியாக்களால், படம் தப்பிக்கிறது.
ஷாருக்கான் நேர்மையான ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோராகவும் கைதிகளிடம் கனிவுகாட்டும் ஆஸாத்தாகவும் இரு கதாபாத்திரங்களில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார். குறிப்பாக விக்ரமாக முதிய தோற்றத்தில் அவரது திரை ஆளுமை கவர்கிறது. கடத்தல்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தும் வீரமும் திறமையும் மிக்க காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் நயன்தாரா. கொடூர மனம் படைத்த ஊழல்வாதியாக விஜய் சேதுபதி நடிப்பால் மிரட்டுகிறார். கவுரவத் தோற்றத்தில் தீபிகா படுகோன், சிறைக் கைதி பிரியாமணி, சுனில் குரோவர் உள்ளிட்டோர் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
அனிருத்தின் பின்னணி இசையில் இரைச்சல். பாடல்களில் தலைப்புப் பாடல், ‘ராமையா வஸ்தாவய்யா’ கவனம் ஈர்க்கிறது. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்துக்கு வண்ணம் மிக்கப் பொலிவை அளித்திருக்கிறது.
ஒரு வெகுஜன கேளிக்கைப் படத்தில் சமூகப் பிரச்சினைகளைப் பேச முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் திரைக் கதையில் போதுமான மெனக்கெடல் இல்லாததால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறார் ‘ஜவான்’.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago