ஜவான் Review: அட்லீ - ஷாருக் கூட்டணியில் மிரட்டும் மேக்கிங்... ஆனால் லாஜிக்?

By செய்திப்பிரிவு

வட இந்தியாவில் ஷாருக்கான் படம் வெளியாவது என்பது ஒரு திருவிழா போன்றது. தென்னிந்திய ரசிகர்களின் திரையரங்க கொண்டாட்டங்களுக்கு அவை சற்றும் சளைத்ததல்ல. இந்த முறை ஷாருக்கான் என்ற மேஜிக்குடன் தமிழகத்தின் அட்லீயும் சேர்ந்து கொண்டதால் பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பை ‘ஜவான்’ பூர்த்தி செய்ததா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்ற பதிலை தாராளமாக சொல்லலாம். இனி வரும் விமர்சனத்தில் சற்றே ஸ்பாய்லர்கள் இடம்பெற்றிருப்பதால் படம் பார்க்காதவர்கள் படத்தின் கதைப் பகுதியை தாண்டிச் செல்லலாம்.

படத்தின் தொடக்கத்தில் இந்திய எல்லைப் பகுதியில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ஆற்றில் படுகாயங்களுடன் ஒரு நபர் அடித்து வரப்படுகிறார். ஊர் மக்கள் அவரைக் காப்பாற்றி உடல் முழுவதும் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு ராணுவத்தினரால் ஊர் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சமயத்தில் படுத்த படுக்கையாக சுயநினைவின்றி கிடக்கும் அந்த நபர் வெகுண்டெழுந்து அந்த மக்களை காக்கிறார். அவர்தான் ஷாருக்கான். கட் செய்தால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மெட்ரோ ரயில் ஒன்றை மொட்டைத் தலை கொண்ட மர்ம நபர் ஒருவர் (ஷாருக்கான்), சில பெண்களின் உதவியுடன் கடத்துகிறார். மிகப் பெரிய ஆயுத வியாபாரியும் அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் தொழிலபதிபருமான காளி கெய்க்வாட்டின் (விஜய் சேதுபதி) மகளும் அந்த ரயிலில் இருக்கிறார். இதனால் அந்த மர்ம நபர் கேட்கும் ரூ.40 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து விடுகிறார் காளி கெய்க்வாட். மறுநாள் அந்தத் தொகை அனைத்தும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. பிறகுதான் தெரிகிறது அந்த மர்ம நபர் மும்பையில் உள்ள மகளிர் சிறை ஒன்றில் ஜெயிலராக இருக்கும் ஜெயிலர் ஆசாத் என்பது.

சிறையில் இருக்கும் சில பெண்களை பயன்படுத்தி நாட்டில் உள்ள சமூக பிரச்சினைகளை சரிசெய்கிறார். அவரை பிடிக்கும் பணி போலீஸ் அதிகாரியான நர்மதாவிடம் (நயன்தாரா) ஒப்படைக்கப்படுகிறது. இன்னொருபுறம் ஒவ்வொரு பிரச்சினையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வில்லன் காளி சம்பந்தப்பட்டிருக்கிறார். முதலில் வந்த ஷாருக்கான் யார்? அவருக்கும் ஜெயிலர் ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதிக்கும் இடையிலான தொடர்பு என்ன? நயன்தாராவால் குற்றவாளியை பிடிக்க முடிந்ததா? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது ‘ஜவான்’.

வழக்கமாக ஒரு அட்லீ படம் வெளியானால், அது பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஏதோ ஒரு படத்தின் சாயலைக் கொண்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படும். ஆனால், அதை திரையில் காட்டும்போது பார்வையாளர்களை சிந்திக்கவிடாமல் செய்வதே அட்லீயின் மேஜிக். அது இந்தப் படத்திலும் சாத்தியமாகியுள்ளது. இந்த படம் ஒன்று, இரண்டல்ல ஆறேழு படங்களின் கூட்டுக் கலவையாக இருக்கலாமோ என்ற சிந்தனை எழாமல் இல்லை. ஆனால், முந்தைய படங்களில் கைகொடுத்த அதே மேஜிக்கை இதிலும் பயன்படுத்தி மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் அட்லீ. பல ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் இல்லாமல் வறண்டு கிடந்த பாலிவுட்டில் ‘ஜவான்’ மூலம் தனக்கென அழுத்தமான ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.

படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை எங்குமே நிற்கவில்லை. மெட்ரோ ரயில் காட்சி தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. லாஜிக் மீறல்கள், க்ளிஷேக்கள் இருந்தாலும் சில அழுத்தமான பின்னணிகள் அவற்றை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன. ஷாருக்கின் அணியில் இருக்கும் பெண்களுக்கான ப்ளாஷ்பேக் காட்சிகளை உருவாக்கிய விதம் சிறப்பு. விவசாயம் குறித்து தமிழ் சினிமாவில் சக்கையாக பிழிந்திருந்தாலும் இதில் இயல்பாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் பிரச்சார நெடி இல்லை. சான்யா மல்ஹோத்ராவுக்கான ஃப்ளாஷ்பேக்கில் உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த சம்பவத்தை இணைத்திருந்த விதம் அருமை. அந்தக் காட்சியும் நெகிழ்வான முறையில் படமாக்கப்பட்டிருந்தது.

மொத்தப் படமுமே ஷாருக்கானின் ‘ஒன் மேன் ஷோ’தான். 58 வயதிலும் படம் முழுக்க தனது ஸ்கிரீன் ப்ரெசன்ஸை அபாரமாக வெளிப்படுத்துகிறார். ஆசாத் மற்றும் விக்ரம் ரத்தோராக நடனம், ஆக்‌ஷன் காட்சிகள், நகைச்சுவை என ஒவ்வொரு காட்சியையும் ஆக்கிரமிக்கிறார். படத்தில் அவருக்கான ஒவ்வொரு காட்சியையும் ஒரு இன்ட்ரோ காட்சியை போல பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் அட்லீ. மெட்ரோ ரயில் காட்சி, இண்டர்வெல் காட்சி, இரண்டாம் பாதியில் வரும் கொள்ளை காட்சி ஆகியவை ஷாருக் ரசிகர்களுக்கு செம ட்ரீட். ஷாருக் - அட்லீ கூட்டணியில் இன்னொரு படம் உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் நயன்தாராவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் கிடையாது. ஹீரோவுடன் சும்மா வரும் கேரக்டர். அதற்கு நேர்மாறாக இந்த படத்தில் நயனுக்கு வலுவான கதாபாத்திரம். அதனை சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது அறிமுகக் காட்சியே அதிர்கிறது. எனினும் சிறிது நேரமே வரும் தீபிகா படுகோன் - ஷாருக் கெமிஸ்ட்ரி அளவுக்கு ஷாருக் உடனான நயனின் கெமிஸ்ட்ரி பெரியளவில் எடுபடவில்லை. ஒரு சில காட்சிகளே வந்தாலும் தீபிகா படுகோன் ஸ்கோர் செய்கிறார். அவருக்கான காட்சிகளும் மிகவும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்டுள்ளன.

வில்லனாக விஜய் சேதுபதி சிறப்பாகவே செய்திருக்கிறார். ஆனால், அவரது கதாபாத்திர வடிவமைப்பில் புதிதாக ஏதுமில்லை. விஜய் சேதுபதி அலட்சியமான உடல்மொழியும், அவர் மேலும் சில நகைச்சுவையான வசனங்களும் பாலிவுட் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் வில்லன் பாத்திரம் இன்னும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி இருவரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளனர். யோகிபாபு எதற்கென்றே தெரியவில்லை. படத்தில் வெறும் ஐந்து நிமிடமே வருகிறார். விவசாய அமைச்சருக்கு தமிழில் குரல் கொடுத்திருக்கும் விடிவி கணேஷின் குரல் வரும்போது அரங்கம் அதிர்கிறது.

படத்தின் இன்னொரு ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவைச் சொல்லலாம். தொடக்கம் முதல் இறுதிவரை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு தெரிகிறது. படத்தில் உள்ள குறைகளை மறைப்பதில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பெரும்பங்கு வகித்துள்ளன. அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் பாசிட்டிவ் அம்சங்களில் ஒன்று. குறிப்பாக விக்ரம் ரத்தோர் தீம், ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கிலும் வரும் ஒரு சிறிய பாடல் ஆகியவை ஈர்க்கின்றன. படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர்கள் அனல் அரசு, சுனில் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கும் ஸ்பெஷல் பாராட்டு. ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியும் அனல் பறக்கிறது.

லாஜிக் மீறல்கள்தான் படத்தின் பெரிய குறை. என்னதான் காரணமாக இருந்தாலும் ரூ.40 ஆயிரம் கோடியை இவ்வளவு விரைவாக வாங்கிவிடமுடியுமா? அரசாங்கம்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? விஜய் சேதுபதிக்கு எதற்காக இத்தனை சலுகை? அப்படி அவருக்கும் அரசாங்கத்துக்குமான டீலிங்தான் என்ன என்பதற்கு பதில்கள் எதுவும் இல்லை. அவர் சொன்னால் அதிகாரத்தில் இருக்கும் அனைவரும் செவிசாய்க்கிறார்கள். ஷாருக் - நயன்தாரா காதல் காட்சிகளில் ஈர்ப்பில்லை. ஒரே காட்சியில் அவர் ஓகே சொல்லிவிடுவதும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. முதல் பாதியில் நயன்தாராவுக்கு வரும் ஒரு பாடலையும், இரண்டாம் பாதியில் தீபிகாவுக்கு வரும் ஒரு பாடலையும் பாரபட்சமே பார்க்கலாம் வெட்டியிருக்கலாம்.

அதுவரை சீராக சென்றுகொண்டிருந்த திரைக்கதையை க்ளைமாக்ஸில் ஜவ்வாக இழுத்தது தேவையற்றது. சஞ்சய் தத் கேமியோ, வாக்கு இயந்திரம் கடத்தல் என எங்கெங்கோ சென்று ஒருவழியாக படம் முடிகிறது. க்ளைமாக்ஸின் ஷாருக் பேசும் வசனங்கள் ஆச்சர்யம். உண்மையில் ஒரு மாஸ் மசாலா பாலிவுட் படத்தில் அரசை எதிர்த்து இவ்வளவு வெளிப்படையாக வசனங்கள் வைக்கப்படுவது மிகவும் கவனிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸில் ஷாருக் பேசும் அந்த வசனங்கள், அதற்கு முந்தையக் காட்சிகளின் இழுவையால் சோர்வு ஏற்படுத்தும் உணர்வை தவிர்க்க முடியவில்லை.

சில லாஜிக் மீறல்களையும், க்ளைமாக்ஸ் இழுவையையும் தவிர்த்துவிட்டு பார்த்தால் அட்லீயின் மிரட்டும் மேக்கிங், ஷாருக்கானின் அபாரமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா ஆக்‌ஷன் கமர்சியல் சினிமாவாக வந்துள்ளது ‘ஜவான்’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்