“நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல” - கங்கனா ரனாவத் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை கங்கனா ரனாவத், “நாம் பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ள தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக, இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கங்கனா கூறியிருப்பதாவது: இந்தியா என்ற பெயரை நேசிக்க அதில் என்ன இருக்கிறது? முதலில் பிரிட்டிஷாரால் ‘சிந்து’ என்று உச்சரிக்க இயலவில்லை. அதனால் ‘இண்டஸ்’ என்று வைத்தார்கள். அது பிறகு ‘இந்து’ என்றும் ‘இந்தோ’ என்றும் மாற்றம் அடைந்து ‘இந்தியா’ என்று மாறியது. மகாபாரத காலத்திலிருந்தே, குருஷேத்ரா யுத்தத்தில் பங்கேற்ற அனைத்து பேரரசுகளும் பாரதம் என்னும் ஒரே கண்டத்தின் கீழ் இருந்தன. எனவே நம்மை ஏன் அவர்கள் இந்து என்று சிந்து அழைத்தனர்? மேலும் பாரத் என்ற பெயர் மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் இந்தியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? அவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்று அழைத்தை நான் அறிவேன், ஏனென்றால் பழைய ஆங்கிலத்தில் இந்தியன் என்றால் அடிமை என்று அர்த்தம். எனவே தான் அவர்கள் நமக்கு இந்தியர்கள் என்று பெயரிட்டன. அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் கூட இந்தியன் என்றால் அடிமை என்று இருந்தது. தற்போதுதான் அதனை அவர்கள் மாற்றினர். மேலும் இது நமது பெயரல்ல. நாம் ‘பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல’. இவ்வாறு கங்கனா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE