'பாரத்' விவகாரம் | கவனம் ஈர்த்த அமிதாப், சேவாக் கருத்துப் பதிவுகள்

By செய்திப்பிரிவு

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்து அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் (President of Bharat) என அச்சிட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் வெளியிட்டுள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “பாரத் மா தா கீ ஜெய்” எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ‘பாரத்’ என்ற பெயர் மாற்றத்துக்கு ஆதரவளிக்கிறாரா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எதற்காக இந்த பெயர் மாற்றம்? இது எந்த வகையில் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் அதன் பொருளாதாரத்துக்கும் உதவப் போகிறது. நான் அண்மையில் அறிந்த செய்திகளில் இது மிகவும் விநோதமான செய்தி. இந்தியா எப்போதும் பாரத் ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும், பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். நமது அசல் பெயரான 'பாரத்' என்பதை அதிகாரபூர்வமாக திரும்ப பெற நீண்ட தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை நான் கேட்டுகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE