‘வார்த்தைகள் வரவில்லை’ - தேசிய விருது குறித்து கீர்த்தி சனோன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது குறித்து நடிகை கீர்த்தி சனோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆக 24) அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த படத்துக்கான விருதை மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது ‘மிமி’ படத்துக்காக கீர்த்தி சனோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே படத்துக்காக பங்கஜ் திரிபாதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது குறித்து நடிகை கீர்த்தி சனோன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதனை தன்னால் நம்பமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

“என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கும் என் குடும்பத்துக்கும் இது மிகப்பெரிய ஒரு தருணம். ’மிமி’ மிகச் சிறப்பான ஒரு திரைப்படம். இந்த விருதுக்கு நான் தகுதியுடைவள் என்று என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த விருதுக் குழுவுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வார்த்தைகள் வரவில்லை. என் மீதும், என் திறமை மீதும் எப்போதும் நம்பிக்கை வைத்து, என்னை முழுவதுமாக ஆதரித்து, ‘மிமி’ போன்ற ஒரு சிறப்பான படத்தை எனக்குக் கொடுத்த தினேஷ் விஜானுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்” இவ்வாறு கீர்த்தி சனோன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE