தேசிய ஒருமைப்பாட்டை பேணியதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு தேசிய விருது!

By செய்திப்பிரிவு

விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. கடந்த மார்ச் 2022ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானபோது சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிப்பது, படத்தை பார்க்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் அரை நாள் விடுப்பு அளிப்பது என்று பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. இந்தப் படம் குறித்த சர்ச்சை நாடாளுமன்றத்தில் கூட எதிரொலித்தது.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடுவர்களின் தலைவராக இஸ்ரேலிய திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட் ‘வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சார படம்’ என ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அக்னிஹோத்ரி இயக்கிய இப்படத்துக்கு இன்று அறிவிக்கப்பட்ட 69-ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரூ.300 கோடி வசூலை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.| வாசிக்க > தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில், “69ஆவது தேசிய திரைப்பட விருது-இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் ‘கடைசி விவசாயி’ படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! மேலும், ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள ஸ்ரேயா கோஷல், கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்ப்பு: மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என்று தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தையொட்டி விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE