ஜவான் படத்தின் 2-வது சிங்கிள் ஹையோடா: நாளை வெளியாகிறது

By செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, அமிர்தா ஐயர் உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஷாருக்கான் மனைவி கவுரிகான் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் பாடலில் ஆயிரத்துக்கும் அதிகமானப் பெண் நடனக் கலைஞர்கள் நடனமாடினர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ திங்கட்கிழமை வெளியாகிறது. இந்த ரொமான்டிக் பாடலை அனிருத்தும், பிரபல பாடகி பிரியா மாலியும் பாடியுள்ளனர். மும்பை அருகே நான்கைந்து இடங்களில் பிரம்மாண்ட செட் அமைத்து இந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியுள்ளனர். பிரபல நடன இயக்குநரும் திரைப்பட இயக்குநருமான ஃபாரா கான், இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான இந்தப் பாடலில் நயன்தாராவும் ஷாருக்கானும் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் இந்தப் படத்துக்காக ரொமான்டிக் பாடலில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில், ‘ஹையோடா’ என்று தொடங்கும் இந்தப் பாடல் இந்தியில் ‘சலேயா’ (Chaleya) என்று தொடங்குகிறது. இந்தியில் இந்தப் பாடலை அர்ஜித் சிங்-ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE