ஆங்கிலப் படம் பார்க்கும்போது இவர்களின் கோபம் எங்கே போகிறது? - வருண் தவான் கேள்வி

By செய்திப்பிரிவு

மும்பை: ‘பவால்’ படத்தில் இடம்பெற்ற ஆஷ்விச் வதை முகாம் தொடர்பான வசனங்கள் குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் வருண் தவான் பதிலளித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர் நடித்துள்ள படம் ‘பவால்’. இப்படம் கடந்த 21ஆம் தேதி நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில், நாயகி ஜான்வி கபூர், ஆண் பெண் உறவை ஜெர்மனியின் ஆஷ்விச் வதைமுகாமுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களை கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

இந்த விமர்சனங்களுக்கு நடிகர் வருண் தவான் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “விமரசனங்கள் எனக்கு புதிதல்ல. என்னுடைய முந்தைய படங்கள் அனைத்தும் விமர்சனங்களை சந்தித்துள்ளன. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. விமர்சனங்களை நான் மதிக்கிறேன். படத்தின் ஹீரோவை நெகட்டிவ் ஆக காட்டுவதற்காக வைக்கப்பட்ட ஒரு வசனம் அது. அந்தக் கதாபாத்திரம் எதிர்மறையாக காட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, எல்லோருடைய கருத்துகளையும் நான் மதிக்கிறேன். அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் சிலர் இந்த விவகாரத்தை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்க்கும்போது இந்தக் கோபமும் உணர்வுகளும் எங்கு போகின்றன என்று எனக்குப் புரியவில்லை. சமீபத்தில் வெளியான ஓர் ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியைப் பார்த்து சிலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர். அது நம் கலாச்சாரத்துக்கும் நம் நாட்டுக்கும் மிகவும் முக்கியமான ஒரு விவகாரம். அது உங்களுக்கு பரவாயில்லை. ஆனால், நாங்கள் செய்வது மட்டும் உங்களுக்கு தனிப்பட்ட விஷயமாக மாறிவிடுகிறது” என்று வருண் தவான் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘Oppenheimer’ படத்தில் ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்று வரும் பகவத் கீதை வரி ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்கும் ஒரு காட்சியில் இந்த வரிகள் இடம்பெறுகின்றன. இதற்கு இந்தியாவில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE