திப்பு சுல்தான் பயோபிக் நிறுத்தம்; மத உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்: தயாரிப்பாளர் திடீர் முடிவு

By செய்திப்பிரிவு

பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் சந்தீப் சிங். இவர் பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’, ராஜ்குமார் ராவ் நடித்த ‘அலிகார்’, பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையான ‘நரேந்திர மோடி’ ஆகிய இந்திப் படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கை கதையைத் தயாரித்து வருகிறார். பங்கஜ் திரிபாதி வாஜ்பாயாக நடிக்கிறார்.

கடந்த மே மாதம், திப்பு சுல்தான் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்க இருப்பதாகவும் அவரின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்த இருப்பதாகவும் சந்தீப் சிங் கூறியிருந்தார். அதோடு, கோயில்கள், தேவாலயங்களை அழித்து இந்துக்களை முஸ்லிமாக மாற்றிய கொடுங்கோலன், திப்பு சுல்தான் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘திப்பு சுல்தான்’ படத்தை கைவிட்டுவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “என்னை, என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு என் சக சகோதர, சகோதரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். நான் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். இந்தியர்களான நாம் ஒற்றுமையாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE