ஷாருக்கானின் ‘ஜவான்’ பிரிவ்யூ நாளை வெளியாகிறது

By செய்திப்பிரிவு

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ நாளை வெளியாகிறது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருந்த நிலையில், ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை டாம் க்ரூஸ் நடிப்பில் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்' ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ட்ரெய்லருக்கு முன்பாக ‘ஜவான்’ படத்தின் ஒரு சிறிய முன்னோட்டத்தை (Prevue) நாளை (ஜூலை 09) காலை 10.30 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது. இதில் ட்ரெய்லரில் உள்ள சில காட்சித் துணுக்குகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE