பெரும் தொகைக்கு விற்பனையான ஷாருக்கானின் ‘ஜவான்’ ரைட்ஸ் 

By செய்திப்பிரிவு

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ‘ஜவான்’ படத்தின் திரையரங்கம் அல்லாத உரிமைகள் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வசூலை ஈட்டியது. இதனால் ‘ஜவான்’ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ‘ஜவான்’ படத்தின் திரையரங்க உரிமைகள் அல்லாத டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகள் ரூ.250 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ட்ரெய்லரே வெளியாகாத இப்படத்தின் உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE