திரைத்துறையில் 25 ஆண்டுகள்: இயக்குநர் கரண் ஜோஹரை கவுரவித்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம்

By செய்திப்பிரிவு

லண்டன்: திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கவுரவித்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கரண் ஜோஹர். 1998ஆம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குச் குச் ஹோத்தா ஹை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ‘கபி குஷி கபி கம்’, ‘கபி அல்விதா நா கெஹ்னா’, ‘மை நேம் இஸ் கான்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக 2016-ல் வெளியான ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தை இயக்கிய அவர், அதன் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. மாறாக தயாரிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கியுள்ள ‘ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி’ படத்தின் டீசர் நேற்று (ஜூன் 20) வெளியானது. இதில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கரண் ஜோஹரை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கவுரவித்துள்ளது. சர்வதேச அளவில் பொழுதுப் போக்குத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்கான சான்றிதழை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கரண் ஜோஹருக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா மூவீஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE