அயோத்தி இளவரசன் ராகவன் (பிரபாஸ்) 14 ஆண்டு வனவாசம் செல்கிறார். மனைவி ஜானகி (கீர்த்தி சனோன்), தம்பி சேஷு (சன்னி சிங்) ஆகியோரும் செல்கிறார்கள். ராகவன் மீதான ஆசை காரணமாக ஜானகியை தாக்க முயல்கிறார் சூர்ப்பனகை. இதனால் சேஷு, அவள் மூக்கை அறுத்து விடுகிறார். இதையடுத்து சூர்ப்பனகை தன் அண்ணன், இலங்கை அரசன் லங்கேஷிடம் (சைஃப் அலிகான்) முறையிடுகிறார். பேரழகி ஜானகியை மனைவியாக்க வேண்டும் என்கிறார். சந்நியாசி வேடத்தில் சென்று ஜானகியை அபகரித்து சிறைவைக்கிறார் லங்கேஷ். வானரப் படைகளுடன் இலங்கை சென்று லங்கேஷை அழித்து ஜானகியை மீட்கும் கதைதான், படம்.
ராமாயணத்தின் கதையிலிருந்து வெகுஜன சினிமா ரசனைக்குத் தோதான பகுதியை எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஓம் ராவத்.
காடு, மலை, கடல், பிரம்மாண்ட அரண்மனைகள் என வியக்க வைக்கும் லொகேஷன்கள், போர்க்காட்சிகள், முப்பரிமாணம் (3டி), கணினி வரைகலை (சிஜி) ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் பிரம்மாண்டத்தையும் புராணக்கதைக்குத் தேவையான தெய்வீகத்தன்மையையும் ஃபேன்டஸி தன்மையையும் உணர வைப்பதில் வெற்றிபெறுகிறார்.
ஆனால் ராமாயணத்தில் உள்ள உன்னதத் தருணங்களையும் உள்முடிச்சுகளையும் திரைக்கதையில் போதுமான அளவு கொண்டுவரத் தவறிவிட்டார். எடுத்துக்காட்டாக, அரியணை ஏற வேண்டிய தருணத்தில் தன் சிற்றன்னை கைகேயிக்கு தந்தை தசரதர் எப்போதோ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, வனவாசம் செல்லும் ராகவனின் உச்சபட்ச தியாகத் தருணமே அவரை ஆதர்ச நாயகனாக ஆக்குகிறது. இது இந்தத் திரைப்படத்தில் துண்டுக் காட்சியாக எந்த பாதிப்புமின்றி கடந்து செல்கிறது. ராகவனும் ஜானகியும் எப்படிப்பட்ட ஆதர்ச தம்பதியராக இருந்தனர் என்பதை உணர்த்தும் காட்சிகள் இல்லாததால் அவர்களுக்கான பிரிவின் வலியை, முழுமையாக உள்வாங்க முடியவில்லை.
» ’ஆதிபுருஷ்’ ஹாலிவுட் கார்ட்டூன் போல இருக்கிறது - 1987-ல் ராமராக நடித்த அருண் கோவில் காட்டம்
» “அம்பேத்கர், பெரியாருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்” - விஜய் பேச்சு குறித்து வெற்றிமாறன் கருத்து
ஜானகியை மீட்க போரிட்டு மடியும் ஜடாயுவுக்கு ராகவன் தன் தந்தைக்கு உரிய இறுதிச் சடங்கைச் செய்வது, ‘தாழ்த்தப்பட்டவள்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் சபரிப் பாட்டியை அருகே அமர வைத்து அவர் கொடுக்கும் பழத்தை உண்பது, விபீஷணனை நண்பனாக ஏற்பது என ஆங்காங்கே சில காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுகின்றன. ஆனால் 3 மணி நேரம் நீளும் படத்துக்கு இவை போதவில்லை.
ராகவன் படை, பல முனைகளிலிருந்து இலங்கை அரண்மனையை முற்றுகையிடுவது, நீருக்குள் புகுந்து இந்திரஜித்தைக் கொல்வது என இறுதிப் போர்க்காட்சியின் புதுமைகளில் இயக்குநரின் கற்பனை வளத்தை ரசிக்க முடிகிறது.
ராகவன் என்னும் ராமனாக பிரபாஸ், உடல்மொழியைக் கச்சிதமாகப் பிரதிபலித்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் தடுமாறுகிறார். சீதையாக கீர்த்தி சனோன் பாந்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். லட்சுமணன் என்னும் சேஷுவாக, சன்னி சிங் படம் முழுவதும் வந்தாலும் அவருக்கு முக்கிய காட்சிகள் எதுவும் இல்லை. அதே நேரம், பஜ்ரங் என்னும் அனுமனுக்கு நல்ல காட்சிகள் அமைந்துள்ளன. அனுமனாக நடித்திருக்கும் தேவதத்தா நாகே அதைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்.
லங்கேஷ் என்னும் ராவணனாக சைஃப் அலி கான் தோற்றம், உடல்மொழி, நடிப்பு என மிரட்டியிருக்கிறார். சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா இணையின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. தமிழ் வசனங்கள் பல இடங்களில் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான பிரம்மாண்டத்தை உணரச் செய்கிறது
தொழில்நுட்பத் தரத்தில் வியக்க வைக்கும் ‘ஆதிபுருஷ்’, ராமாயணம் ஏற்படுத்த வேண்டிய உணர்வுபூர்வ உயரத்தைத் தொடத் தவறுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago