தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களின் பட்டியலும், மறக்க முடியாத பாடல்களின் வரிசைப்படுத்துதலும் இயக்குநர் மணிரத்னம் - இசைஞானி இளையராஜா இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் இல்லாமல் முழுமை பெறாது. மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் இருந்து 'ரோஜா' திரைப்படத்துக்கு முன்பு வரை அவரது அனைத்துப் படங்களுக்கும் தனது இசையால் அழகைக் கூட்டியவர் இளையராஜா. இருவரும் இணைந்து தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு என 10 என்ற எண்ணிக்கையில்தான் இணைந்து பணியாற்றினர். ஆனால், அந்தப் படங்கள் அனைத்துமே சினிமாவின் உச்சம் தொட்ட படைப்புகள்.
பாலச்சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகின் மிகப்பெரிய ஆளுமைகள் ஒருபக்கம், பாரதிராஜாவின் உதவி இயக்குநர்கள், புதிய இயக்குநர்களின் படை ஒருபக்கம் என தமிழ் சினிமாவின் வசந்த காலம் வளமாக இருந்தாலும், தொடர்ந்து ஐரோப்பிய பாணியில் பயணித்த தமிழ் சினிமாவுக்கு மாற்று தேவையென உணரப்பட்ட காலம் அது. அதிலும் குறிப்பாக நகரமயமாதலின் சாயலோ, நகரங்கள், நகரத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் குறித்த பதிவுகள் பெரிதும் இல்லாமல் கிராமங்களையும், குடும்பங்களையும், கதைக்களமாகக் கொண்டு அங்கு வசிக்கும் பிரதான கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி நகரும் கதைகளே அதிகமாக வந்துகொண்டிருந்தன. இதனால் கிராமத்து கதை, இளையராஜா இசை என்பதுதான் அதுவரை கோடம்பாக்கத்தின் வெற்றி சூத்திரமாக இருந்து வந்தது.
இந்தச் சூழலில்தான் மணிரத்னம் - இளையராஜா கூட்டணி 1983-ல் முதன்முதலில் 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னடப் படத்தில் இணைந்தனர். அங்கு அந்தப் படம் மாபெரும் ஹிட்டடித்தது, படத்தின் பாடல்களும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இக்கூட்டணி 1984-ல் மலையாளத்தில் 'உணரூ' படத்தில் இணைந்து கேரளத்திலும் தடத்தைப் பதித்தது. பின்னர் 1985-ல் தமிழில் முதன்முதலாக இருவரும் இணைந்த படம் 'பகல்நிலவு' அந்தப் படமும் பாடல்களும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அழகும் ஆச்சரியமும் ஒருசேர அமைந்த அனுபவத்தைக் கொடுத்திருந்தது.
ரக்கட் ஸ்டைல் ஹுரோ, ஊருக்கு நல்லது செய்யும் பெரியவரின் மறுபக்கம், நேர்மையான காவல் துறை அதிகாரி இம்மூவருக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகளையும், இந்த களேபரங்களுக்கு இடையே முட்டம் கடற்கரையின் கடல் அலையில் கால்களை நனைக்கும் மகிழ்ச்சிக்கு இணையான காதலையும் அழகியலோடு சொல்லி ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆட்டத்தை தொடங்கியது மணிரத்னம் - இளையராஜா கூட்டணி.
» “படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்; வேற மாதிரி இருக்கும்” - ‘மாமன்னன்’ குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ்
» “இதுதான் என் கடைசி படம்” - ‘மாமன்னன்’ விழாவில் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த ஆண்டில் இக்கூட்ணியில் வெளிவந்த திரைப்படம் 'இதய கோயில்'. வழக்கம்போலவே படமும், படத்தின் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. மணிரத்னத்தின் முதல் படமான 'பகல் நிலவு' கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம் எனும் அழகிய மீனவ கிராமத்தில் எடுக்கப்பட்டிருக்கும். 'இதய கோயில்' திரைப்படத்தில் நாயகன் சங்கரன் கோயில், குளம், ஆற்றங்கரையுடன் அமைந்த கிராமத்தில் இருந்து அப்போதைய மெட்ராஸுக்கு வந்து சேர்ந்திருப்பார். பெருநகரமாக உருவாகப் போகும் மெட்ராஸ் நகரில் பதிப்பதற்கான ராட்சத குழாய்கள் இப்படத்தில் வரும் காட்சிகளில் தென்படும். சாலையில் துளையிட்டு புதைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத குழாய்களைப் போலத்தான், இந்த இரண்டு படங்களும் மணிரத்னம் - இளையராஜா கூட்டணியை திரை ரசிகர்கள் தங்களது மனங்களில் பதித்துக் கொண்டனர்.
ஆனால், இத்தப் படங்கள் வெற்றி இலக்கை தொட்டிருந்தாலும் ஹாலிவுட் சினிமாக்களுக்கான பாணியில் தமிழ் சினிமா பயணிக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்கள் மத்தியில் தொக்கி நிற்கவே செய்தது. அப்போதுதான் 1986-ல் 'மௌன ராகம்' திரைப்படம் வெளியானது. அதுவரை பெண்கள் பக்கமாக இருந்து மட்டுமே தமிழ் சினிமா நிறுத்துப்பார்த்த நியாயத் தராசை பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் பக்கம் நின்று நிறுத்திப் பார்த்தார் இயக்குநர் மணிரத்னம். இறந்துபோன காதலனின் நினைவுகளுடன் வாழும் பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தால் ஒரு குடும்பத்தில் பாடப்படும், வெளியே கேட்காத வலியின் பாடுகளும் நிசப்தத்தின் ஸ்வரங்களுமே 'மௌன ராகம்'. படம் வெளிவந்த நாள் தொடங்கி இப்போது வரை இந்தப் படம் பேசப்படும் என்பதால்தான் இப்படியொரு தலைப்பை வைத்தார் போல மணிரத்னம்.
இந்தப்படத்தின் கதை, மேக்கிங் ஸ்டைல், கேமரா, லைட்டிங், பாடல்கள், வசனங்கள், பின்னணி இசை என தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமாவை நோக்கி நகரத் தொடங்கிய படமாக இந்தப் படத்தைக் கூறலாம். கல்யாணம் முதன்முதலாக வெளியே கூட்டிச் செல்லும் கணவன் ஆசப்பட்டதைக் கேட்கச் சொல்ல விவாகரத்துக் கேட்கிறாள் மனைவி. மணிரத்னத்தின் இந்தக் காட்சி அமைப்புக்கு இளையராஜா எஸ்பிபி குரலில் 'நிலாவே வா' பாடலுக்கு முன் ஒரு ஹம்மிங் வைத்திருப்பார். அந்த ஆஆஆஆஆஆ என்ற சின்ன ஹம்மிங்கில் கணவன் கதாப்பாத்திரத்தின் நிர்மூலமான திருமண வாழ்க்கையையும், மனத் துயரத்தையும், வேதனையையும், வலியையும் பார்வையாளர்களுக்கு கடத்திவிடுவார் இளையராஜா.
கணவனின் தொடுதலை "தொட்டாலே கம்பிளி பூச்சி ஊர்வது போல இருக்கு" நினைக்கும் மனைவியின் விருப்பப்படி விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு வரும் இருவரது கண்களும் சில நாழிகை பார்த்துக்கொள்ள வரும் "மன்றம் வந்த தென்றலுக்கு" பாடலுக்கு முன் வரும் ஹம்மிங் மனைவி மீதான ஆத்திரத்தையும், கோபத்தையும் கூடவே சோகத்தையும் இழைத்துக் கொட்டியிருப்பார் இளையராஜா. இந்தப் படத்தில் தாஜ்மஹாலின் பின்னணியில் வரும் "பனி விழும் இரவு" பாடலின் தாளம் ஒரு கொண்டாட்டத்துக்கான பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். வேறு யாராக இருந்தாலும் வணிக நோக்கில் நாயகன், நாயகி கனவில் வருவது போல ஆட்டம் போட வைத்திருப்பர். ஆனால் மணிரத்னம் அதை செய்திருக்கவில்லை. இதுதான் மணிரத்னம் - இளையராஜா கூட்டணியை உயிர்த்திருக்க வைத்தது.
'மௌன ராகம்' வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் 1987-ல் வெளியானது 'நாயகன்'. ஹாலிவுட் சினிமா பாணியிலான முழுமையான தமிழ் சினிமா 'நாயகன்' . இந்தமுறை இந்த கூட்டணியில் கமல்ஹாசன் இணைந்தது படத்தின் கிராஃப்பை வானளவு எட்டச் செய்திருந்தது. பாடல்களைக் கடந்து இளையராஜாவின் உயிரோட்டமான பின்னணி இசையை உலகறியச் செய்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கு மிக முக்கிய பங்குண்டு. கமல்ஹாசனின் நடிப்பு, மணிரத்னத்தின் காட்சி அமைப்பு, இளையராஜாவின் இசையென மூவரும் சேர்ந்து திரையில் நிகழ்த்திக்காட்டிய அசாத்தியங்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய திரை உலகை உறைந்து போகச் செய்திருந்தது.
மும்பை தாராவியில் வாழும் தமிழ் மக்களின் கோரம் நிறைந்த சோக முகத்தில் மெலிதாக இழையோடிய வீர பின்னணியை பேசிய திரைப்படம் 'நாயகன்' . பாலியல் தொழிலாளியை நாயகன் மணமுடிக்கலாம் என்ற மாற்றுச் சிந்தனை மூலம் சூழ்நிலை கைதிகளாக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளின் வேதனையை பங்கிட்டுக் கொண்ட திரைப்படம் அது.
'தி காட் ஃபாதர்' ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக இந்திய அளவில் ஒப்பிட்டு பேசப்படும் இந்தப் படத்தின் சாயல் இல்லாமல் அதன்பின் வந்த 'டான்' கதைகளே இல்லை. ரத்தமும் சதையும் கிழித்து தொங்கவிடப்படும் கதைக்களத்தின் ஊடே அவ்வப்போது வரும் 'தென்பாண்டிச் சீமையிலே' பாடலும், அந்தப் பாடலின் கீபோர்ட் பெல்லின் இசையும் பேராறுதலைச் சொல்லியிருக்கும். கோயிலில் கண்ணை மூடி சாமி கும்பிடும் நீலாவின் கழுத்தில் வேலு தாலி கட்டும் காட்சி ஒன்றை வைத்திருப்பார் மணிரத்னம்.
அதைத்தொடர்ந்து 'நீ ஒரு காதல் சங்கீதம்' பாட்டு வரும். நீலா வேலுவுக்கு வார்த்தைகளால் சொல்ல வேண்டிய நன்றியை தூரத்திலிருந்து கேட்கத் துவங்கும் வயலின் வழியாக கொண்டு வரும் இளையராஜா வீணையின் இசைகொண்டு நீலாவின் உள்ளக்கிடக்கையின் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தை வீணையின் வழியே பிரவாகித்திருப்பார். இந்த உணர்வு கடத்தலைத்தான் மணிரத்னம் திரைப்படங்களில் இளையராஜாவின் இசை செய்து கொண்டே வந்திருக்கும்.
இதனைத் தொடர்ந்து 1988ல் வெளிவந்த 'அக்னி நட்சத்திரம்' 1989ல் 'இதயத்தை திருடாதே', 1990ல் 'அஞ்சலி' மணிரத்னம் இளையராஜா கூட்டணியில் மூன்று வெவ்வேறு ஜானர் கதைகளை மையமாக கொண்ட திரைப்படங்கள் வெளியாகின. அக்காலத்தைய இளைய பட்டாளத்தின் காதல், ரொமான்டிஸம், விருப்பம், ஆசை, கனவு, கோபம் என ஒன்றுவிடாமல் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷாவைக் கொண்டு மணிரத்னம் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு விஷுவல் விருந்து படைத்திருப்பார்.
"தூங்காத விழிகள் ரெண்டு" பாடலில் வரும் மணிரத்னத்தின் காட்சியமைப்பும், பி.சி.ஸ்ரீராமின் கேமிராவும், இளையராஜாவின் இசையோடு சேர்ந்து பலரது தூக்கத்தைப் பறித்தவை. ஒரு பாடல் காட்சியை ஒரு அறைக்குள் எப்படி பேரழகுடன் எடுக்க முடியும் என்பதற்கான கவிதையாக அந்தப்பாடல் அமைந்திருக்கும். அதேபோல் 'ஒரு பூங்காவனம்' நீச்சல்குளத்திலும், 'நின்னுக்கோரி வரணும்' பாடலும் ஓர் அறைக்குள்ளும் எடுக்கப்பட்டவைதான். ஆனால் அவை பார்வையாளர்களின் பரந்த மன வெளியை திறந்தவை.
மணிரத்னம் இளையராஜா கூட்டணியில் தெலுங்கில் வந்த 'கீதாஞ்சலி'தான் தமிழில் 'இதயத்தை திருடாதே'. படத்தில் துருதுருவென வரும் கிரிஜாவை அப்போதிருந்த எந்த இதயமும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. காதல்தான் படத்தின் கரு. இளையராஜாவும் பி.சி.ஸ்ரீராமும் மணிரத்னத்துடன் சேர்ந்து படம் பார்த்த ஒவ்வொரு இதயத்தையும் கொள்ளையடித்திருப்பார்கள். படத்தின் காட்சிகளுக்கு இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் இதயத்தின் துடிப்பாக அமைந்திருந்தன.
குறிப்பாக கிரிஜாவின் குறும்புத் தனங்களுக்கு வரும் இசைக்கோர்ப்புகள் எல்லாமே மறக்கமுடியாதவை. உதகையின் பசுமைப் பள்ளத்தாக்குகளில் மஞ்சுமூட்டமாய் நகரும் மேகங்களுடன் நம்மையும் பயணிக்க வைத்திருக்கும் இந்தப்படம் வெளியான காலத்தில், காதலர்களின் பேஃவரைட் இப்படமாகத்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்ட இருவருக்கு காதல் வந்தால் என்ன நடக்கும்? அந்த காதல் என்னவெல்லாம் செய்து பார்க்கத் தூண்டும் என்பதை மணிரத்னத்துக்கே உரிய பாணியில் எடுத்திருப்பார். படம் முடியும்போது ஒருமுறையாவது காதலித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வை இளையராஜாவும் மணிரத்னமும் பார்வையாளர்களுக்கு பரிசளித்திருப்பர்.
இந்தக் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'அஞ்சலி'. கேட்டட் கம்யூனிட்டி பற்றி தற்போது பரவலாக பேசப்படுகிறது. 90களில் அபார்ட்மென்ட் வீட்டுக்குழந்தைகளின் வாழ்வியலை அழகுற காட்சிப்படுத்தியிருப்பார் மணிரத்னம். இந்தப்படத்தின் நாயகர்களே குழந்தைகள்தான். கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி, கிருஷ்ணா, விஷ்ணுவர்தன் உள்பட தற்காலத்தில் இளையோரின் பெரும் வரவேற்பைப் பெற்ற பலரும் இந்தப்படத்தில் பங்கு பெற்றிருப்பர்.
ரகுவரனுடன் சண்டையிடும் ரேவதி "ப" வடிவிலான அடுக்குமாடி குடியிருப்பின் மெத்தைப்படிகளில் சண்டைபோட்டபடி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்வார், அந்தக் காட்சி இப்படத்தில் வரும் மாஸ்டர் பீஸ் காட்சிகளில் முக்கியமானது. மனவளர்ச்சிக் குன்றிய குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டு ஒரு குடும்பம் படும்பாடுகளை மணிரத்னமும் இளையராஜாவும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்திருந்த விதம் அலாதியானது.
மறக்கவே முடியாத சாதனைகளை செய்த இந்த இருவரும் இறுதியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் 1991ல் வெளிவந்த 'தளபதி' திரைப்படத்தில்தான். ரஜினிகாந்த் எனும் நடிகருக்குள் இருந்த நடிப்புத் திறமையை மிக நீண்ட காலத்துக்குப்பின்னர், திரையில் மீண்டும் கொண்டுவந்து சேர்த்த பெருமை மணிரத்னத்தையே சாரும்.
வணிக வெற்றியின் ஐகானாக்க மாற்றப்பட்ட ரஜினியிடம் இருந்து அப்படியொரு திரைப்படம் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மேக்கப்பும், ஸ்டைலும் இல்லாமல் ரஜினியின் உண்மையான அழகை வெளிக்கொண்டுவந்திருந்த படம்தான் தளபதி. படத்தில் வந்த பாடல்களும், ராஜாவின் பின்னணி இசையும் படத்தை வேற லெவலுக்கு கொண்டுபோய் சேர்த்திருந்தது. முகத்துக்கு மிட் க்ளோஸில் பேனாகும் கேமராக் கோணத்தில் மழையில் நனைந்தபடி வரும் ரஜினிகாந்தின் அறிமுகக்காட்சிதான் தமிழ்சினிமாவின் உண்மையான திரை தீப்பிடித்தக் காட்சி.
கோயிலில் சாமி கும்பிடும் காட்சியொன்றில் கூட்ஸ் வண்டியின் சத்தம் கேட்டு ரஜினியும், ஸ்ரீவித்யாவும் ஒரு சேர திரும்பிப்பார்க்க, அவர்கள் இருவரையும் ஜெய்சங்கர் பார்த்துக்கொண்டிருப்பார் கூட்ஸ் வண்டியின் சத்தம் மறந்து இந்த மூவரின் வழியே மணிரத்னம் நம்மை ஆக்கிரமித்துக்கொள்ள இளையராஜாவின் இசை நம் செவி வழி சென்று மனங்களில் குடிபுகுந்துக்கொள்ளும். இப்படி ரஜினி மட்டுமின்றி படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் அறிமுகம், நடிப்பு, பாடல்கள், பின்னணி இசை, காட்சியமைப்புகள் என தளபதி திரைப்படத்தின் ஒவ்வொரு ப்ஃரேமும் தமிழ்த்திரையுலக வரலாற்றின் மைல்கல் என்பதே நிதர்சனம்.
பகல் நிலவு தொடங்கி தளபதி வரை, பக்கம் பக்கமான வசனங்களைக் குறைத்து குறைவான சொற்களைக் கொண்ட ஒருவரி சொற்களில் சொல்ல வேண்டியதை நறுக்கென சொல்லியிருப்பார் மணிரத்னம். பகல் நிலவு, இதய கோயில் திரைப்படத்தில் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பைவிட, அதன்பின்னர் வந்த திரைப்படங்களில் பின்னணி இசைக்காக இன்றுவரை பேசப்படுபவை. ஆனால், இன்ஸ்டா போஸ்டில் காதல் மலர்ந்து கட் சாங் ஸ்டேட்டஸ் வழி காதலை முறித்துக்கொள்ளும் எமோஜி ரெஸ்பான்ஸ் தலைமுறைகளின் இன்ஸ்டன்ட் காதல் காலத்தில், மணிரத்னமும் இளையராஜாவும் இணைந்தால் எப்படியிருக்கும் என்பதை அறிய முடியாமல் நீள்வதுதான் மீளாத் துயர்.
| ஜூன் 2 - இளையராஜா, மணிரத்னம் பிறந்தநாள் |
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago