டோவினோ தாமஸ் முதல் ரித்திகா சிங் வரை: மல்யுத்த வீராங்கனைகளுக்காக குரல் கொடுத்த திரைப் பிரபலங்கள்

By செய்திப்பிரிவு

‘பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளுக்காக திரையுலகில் சிலரும் குரல் எழுப்பியுள்ளனர். அதன் விவரம்:

நடிகர் டோவினோ தாமஸ் : “சர்வதேச விளையாட்டு அரங்கில் நமது மதிப்பை உயர்த்தியவர்கள் அவர்கள். முழு தேசத்துக்கும் நம்பிக்கைக்கு வெற்றியின் வண்ணங்களை அளித்தவர்கள். அவர்களின் சாதனைகளையும் பாராட்டுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதி பறிக்கப்பட்டுவிடக் கூடாது. எதிர் பக்கம் நிற்பவர்கள் பலசாலிகள் என்பதற்காக அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிடக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை கேட்டு பரிசீலிக்க வேண்டும். நீதி தாமதிக்கப்படக் கூடாது, மறுக்கப்படக்கூடாது! ஜெய் ஹிந்த்.”

ரித்திகா சிங்: “அவர்களின் உணர்வுகளை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த உலகத்தின் முன்பும் அவர்களின் கண்ணியமும், மரியாதையும் மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்டுள்ளனர். உலக அரங்கில் நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவுக்கு பின்னால் அவர்கள் இருப்பதை போல, நாமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.”

பா.ரஞ்சித்: "உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நெஞ்சில் ஏந்திய சாம்பியன்கள் எந்தவிதமான கண்ணியமும் மரியாதையும் இன்றி நடத்தப்பட்டுள்ளனர். சாம்பியன்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசப் போகும் முடிவுக்கோ அல்லது அவர்களது போராட்டத்துக்கோ அரசு பதிலளிக்காமல் மவுனம் காப்பது வெட்கக்கேடானது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு குரல் கொடுத்து, எம்பி பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக நீக்கவும், அவருக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவும் நான் கோரிக்கை விடுக்கிறேன்."

நடிகர் கலையரசன்: “நம்மை பெருமைப்படுத்தியவர்கள் நீதிக்காக போராடி வருகிறார்கள். கண்ணியமும் மரியாதையும் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளார்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் சாம்பியன்ஸ்.”

மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்த விவகாரத்தில் இந்தி திரையுலகம் அமைதியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுத்தது குறித்து பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா சாடியுள்ளார்.

நசிருதீன் ஷா: “நாட்டுக்கு பதக்கங்களை வாங்கிக் கொடுத்து தற்போது போராடி வரும் மல்யுத்த வீரர்கள் குறித்து இந்தி திரையுலகில் யாராவது படம் எடுக்கத் தயாரா? இப்படியான சப்ஜெக்டில் படம் எடுக்க தைரியம் உள்ளதா? பண்ண மாட்டார்கள். காரணம், அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை எண்ணி பயப்படுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் இந்தி திரையுலகம் வாயை முடி மவுனித்து கிடப்பது ஒன்றும் புதிதல்ல.”

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால்: “இது ஒரு முக்கியமான கேள்வி. அவர்கள் நம் விளையாட்டு வீரர்கள், அதற்கு முன் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் போராட்டக்காரர்களின் குரலுக்கு செவிமடுக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால், அடுத்த கட்டம் என்ன? வீராங்கனைகளின் பிரச்சினைக்கு தீர்வென்ன? நானும் ஒரு விளையாட்டு வீரன்தான். என்னால் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை மாறும் தீர்வு கிடைக்கும்.”

புகாரும் போராட்டமும்: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் எல்லாம் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் நேற்று மாலை 6 மணியளவில் வீசுவோம் என சாக்சி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திங்கள்கிழமை மாலை ஹரித்துவார் வந்தனர். கண்ணீருடன் கங்கைக் கரைக்கு சென்ற அவர்களை, உள்ளூர் மக்களும், விவசாய சங்கத்தினரும் சமாதானப்படுத்தினர். பல ஆண்டு கடின உழைப்புக்கு பின்வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீசினால், 2 ஒலிம்பிக் பதக்கங்களையும், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற பல பதக்கங்களையும் நாடு இழக்கவேண்டியிருக்கும். அதனால் பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.

சர்வதேச விளையாட்டு அமைப்புகள் கண்டிப்பு: “குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் முறையான விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். கடந்த சில நாட்களாக மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கையாளப்படும் விதம் கவலை அளிக்கிறது. தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாக பேரணி சென்ற அவர்களை போலீஸார் கைது செய்தது கவலை தருகிறது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக அவர்கள் போராடி வந்த இடமும் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் கூட்டமைப்பை ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யும். அதன் பின்னர் வீரர்கள் தனி கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என்று ஐக்கிய உலக மல்யுத்த கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்ட கண்டனத் தகவலில், “உள்நாட்டு சட்டத்துக்கு ஏற்ப இந்திய மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பான விசாரணை முதல் கட்டத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். இது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். இந்த நடைமுறைகளின்போது மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில், இந்த விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், இந்திய விளையாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ரா, அபினவ் பிந்த்ரா, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் போராட்டம் மேற்கொண்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE