சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அமைதி காப்பது ஏன்? - நடிகர் சித்தார்த் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்து வருவது குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளார்.

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் ‘டக்கர்’. இப்படத்தில் திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மே 30) சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பேசியதாவது: "எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தங்கள் உண்டு. இந்தப் படத்தில் ‘டக்கர்’ என்ற தலைப்பை பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப் பட்டது.

’குஷி’ படம் போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லை. பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும் வருகிறது. ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் ‘டக்கர்’ நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை." இவ்வாறு சித்தார்த் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE