‘‘நீங்களெல்லாம் ஏன் சினிமாவுக்கு வர்றீங்க-ன்னு கேட்டார்கள்” - அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: “நானும் சினிமாவுக்கு வரும்போது, ‘நீங்க எல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வர்றீங்க? உங்களால இதை பண்ண முடியாது’ என பலரும் கூறினர்” என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “என்னுடைய அப்பா அவருடைய 36 வயதிலேயே இறந்துவிட்டார். நாங்கள் 4 குழந்தைகள் இருந்தோம்.

அம்மா எங்களை வளர்க்க பல வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. எல்ஐசி வேலை, புடைவையை விற்பது என பல்வேறு வேலைகளை செய்து எங்களை வளர்த்தார். நானும் சினிமாவுக்கு வரும்போது, ‘நீங்க எல்லாம் எதுக்கு சினிமாவுக்கு வர்றீங்க? உங்களால இதை பண்ண முடியாது’ என பலரும் கூறியுள்ளனர். அப்படி பேசுபவர்கள் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE” ஆக இருப்பதுதான் காரணம். நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிகம் நடிப்பதால், எனக்கு ஆண்களைப் பிடிக்காது என யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியா என்று கூட சிலர் கேட்டார்கள். அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர். கதையின் முக்கியத்துவம் கருதியே படங்களைத் தேர்வு செய்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE