“நான் பயந்த பெண்ணாக இருந்தேன்” - தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரியங்கா சோப்ரா 

By செய்திப்பிரிவு

“நான் பயந்த பெண்ணாக இருந்தேன். சின்ன சின்ன விஷயங்களைக் கூட சீரியஸாக எடுத்துக்கொள்வேன்” என தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா நினைவுகூர்ந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தனது 18ஆவது வயதில் 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர். அந்த சமயத்தில் தான் அவர் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ (2002) படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து ‘தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் ஏ ஸ்பை’ (The Hero: Love Story of a Spy) படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். இந்நிலையில் இந்தக் காலக்கட்டத்தில் தான் மிகவும் பயந்த பெண்ணாக இருந்தததாகவும், சிறிய விஷயங்களைக்கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவராக இருந்ததாகவும் தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் பேட்டி ஒன்றில் அவரிடம், ‘உங்களின் கடந்த காலத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என நினைத்தால் என்ன சொல்லுவீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா, “அமைதியாக இரு எனக் கூறுவேன். எதையும் பெரிதாக எடுத்துகொள்ளாதே என்பேன். காரணம், சின்ன சின்ன விஷயங்களைக் கூட சீரியஸாக அப்போது எடுத்துக்கொள்வேன். நான் மிகவும் சென்சிட்டிவாக இருந்தேன். அடிக்கடி எமோஷனலாக அதிகம் காயப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஒவ்வொரு தோல்விக்குப்பிறகும், வாய்ப்பை தவறவிட்ட பிறகும் அதிலிருந்து மீள்வது எனக்கு எளிதாக இருக்கவில்லை. குறிப்பாக சினிமாவில் நான் அடியெடுத்து வைத்த 2000-ம் காலக்கட்டத்தில் நான் மிகவும் பயந்த பெண்ணாக இருந்தேன். காரணம் அப்போது எனக்கு இங்கு யாரையும் தெரியாது. நான் டிவியில் பார்த்து வளர்ந்த உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தது பயமாகத்தான் இருந்தது. ஆனால் நான் என் கடந்த காலத்துக்கு சொல்ல விரும்புவது ‘கொஞ்சம் சிரி. எல்லாம் சரியாகிவிடும்’ என்பதைத் தான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE