இளையராஜா - விஜய், யுவன் - அஜித் கூட்டணியும் சில சுவாரஸ்யங்களும்!

By குமார் துரைக்கண்ணு

‘விஜய் 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்று ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்த எதிர்பார்ப்பில் மிக முக்கிய பங்கு இருக்கிறது. சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் இணையும் வாய்ப்பு யுவனுக்கு அமைந்திருக்கிறது. கடந்த 2003ம் ஆண்டு கே.பி.ஜெகன் இயக்கத்தில் வெளியான 'புதிய கீதை' திரைப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

விஜய் - அஜித்தும், இளையராஜா - யுவனும்: நடிகர்கள் விஜய், அஜித்துக்கும் இசையமைப்பாளர்களான இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கிறது. யுவனின் தந்தையும் இசையமைப்பாளருமான இளையராஜா நடிகர் விஜய்யின் ஒருசில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அத்திரைப்படங்களில் வெளிவந்த பாடல்கள் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்படுபவை. அதில் 'காதலுக்கு மரியாதை', 'ஃப்ரண்ட்ஸ்' படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. அந்தப் படங்களின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. ஆனால், நடிகர் அஜித்துக்கு இளையராஜாவின் இசையில் அப்படி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமும், பொதுவான ரசிகர்களால் எப்போதும் பாடி மகிழும் பாடல்களும் அமையாதது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. ஒரே ஒரு பாடல் உண்டு 'உல்லாசம்' திரைப்படத்தில் வரும் 'யாரோ யார் யாரோ' பாடல், அஜித்துக்கு இளையராஜா பாடியிருப்பார். ஆனால், அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா.

'உல்டா'வாக மாறிய கணக்கு... - இந்த கணக்கு அப்படியே உல்டாவாக மாறி, நடிகர் அஜித்தின் ஒருசில படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அந்த படங்களில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் பெரிதும் பேசப்பட்டவை. குறிப்பாக அஜித்தின் அறிமுக காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கான யுவனின் தீம் மியூசிக்குகள் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவை. இந்தக் கூட்டணியிவ் வெளிவந்த 'பில்லா', 'மங்காத்தா' படங்கள் மிகப் பெரும் வெற்றியை குவித்தன. அந்தப் படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தவை. ஆனால், நடிகர் விஜய்க்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அதுபோன்று அமையாதது குறையாக தொடர்ந்து வருகிறது. இதுதான் இளையராஜா விஜய், யுவன் அஜித் ஆகிய 4 பேருக்கும் இடையே உள்ள தொடர்பு.

இளையராஜாவும் விஜய்யும்: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஜய்யும், அஜித்தும் நன்கு பரிச்சயமான நேரத்தில், அதாவது அவர்கள் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் அவர்கள் இருவரும் நடித்த படங்களுக்கு பல இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். இருவரது படங்களிலும் கணிசமான பங்களிப்பைச் செய்தவர் இசையமைப்பாளர் தேவா. அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்து 1995-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ராஜாவின் பார்வையிலே'. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் வந்த 'அம்மன் கோவில் எல்லாமே' மற்றும் 'ஒரு சுடர் இரு சுடர்' பாடல் இப்போது வரை ரசிகர்களின் நினைவில் நிலைகொண்டிருக்கிறது. இதே ஆண்டு இளையராஜா இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'சந்திரலேகா' படத்தில் வந்த 'அல்லா உன் ஆணைப்படி', 'அரும்பும் தளிரே' பாடல்கள் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவை.

காதலுக்கு மரியாதையின் தாக்கம் - அந்த வரிசையில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதலுக்கு மரியாதை'. 90களின் இளமைப் பட்டாளத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் வருகை வெகுவாக ஈர்த்திருந்தது. ஆனால், 'காதலுக்கு மரியாதை' படத்தின் மாபெரும் வெற்றியும் அப்படத்தின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கமும், போர்கண்ட சிங்கமான இளையராஜாவுக்கு மிகப் பெரிய கம்பேக்காக அமைந்தது. இதைத் தொடர்ந்து இளையராஜா விஜய் காம்போவில் 2000-ல் வெளிவந்த திரைப்படம் 'கண்ணுக்குள் நிலவு'. இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே இன்றுவரை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பட்டியலில் இடம்பிடித்தவை. தொடர்ந்து இளையராஜா - விஜய் கூட்டணியில், 2001-ல் வெளியான திரைப்படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இந்தப் படத்திலும் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாகவே வந்திருந்தன. படத்தின் வெற்றி குறித்து அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை எனும் அளவுக்கு வெற்றிவாகை சூடிய திரைப்படம் இது.

தொடரும் குறை: இளையராஜாவின் இசையில் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடித்து 1995ம் ஆண்டு வெளியான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் பரவலாக நினைவுகூரப்படும் இரண்டு பாடல்களுமே விஜய்க்கு அமைந்துவிட்டதால், அந்தப் படத்தில் வரும் அஜித்துக்கான பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கவில்லை. இதையடுத்து 1999ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'தொடரும்' படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதோடு பாடல்களும் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்த தவறிவிட்டது. ஆனால், அந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'உனைத்தேடி', 'வாலி' , 'ஆனந்த பூங்காற்றே', 'அமர்க்களம்' , 'நீ வருவாய் என' உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தது. இந்தப் படங்களின் வெற்றி மற்றும் பாடல்களுடன் ஒப்பிடுகையில் 'தொடரும்' திரைப்படமும், பாடல்களும் சொல்லும்படியான இலக்கை எட்டியிருக்கவில்லை.

அஜித்தும் யுவனும்: இந்த கணக்கு அஜித் - யுவன் கூட்டணியில் அப்படியே தலைகீழாக மாறியிருந்தது. 1997-ம் ஆண்டு 'அரவிந்தன்' படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான யுவனுக்கு 2001ம் ஆண்டு அஜித்தின் கூட்டணியில் பொங்கலன்று, 'தீனா' திரைப்படம் வெளியானது. ஏகே 'தல'யாக களமிறங்கி சம்பவம் செய்த அந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படமும், படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக அஜித்துக்கு "தினக்கு தினக்கு தின தீனா" என வரும் தீம் மியூசிக்கைப் போட்டு திரையரங்கை அதிரச் செய்திருப்பார் யுவன். அங்கிருந்துதான் தொடங்கியதுதான் அஜித் - யுவன் கூட்டணி.

ரிங்டோனாக மாறிய தீம் மியூசிக்... - இதைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு அஜித் - யுவன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'பில்லா'. இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைலும், ஸ்டைலிஷ்ஷான அஜித்தின் லுக்கும் எந்தளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கொண்டாடப்பட்டது படத்தின் இசை. பாடல்களும் படத்தின் பின்னணி இசையும் படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சேர்த்திருந்தது. குறிப்பாக அஜித்துக்கான அந்த பின்னணி இசை, பலரின் நிரந்தர ரிங்டோனாக மாறியிருந்தது. இதே கூட்டணியில் அடுத்த ஆண்டில் வெளிவந்த 'ஏகன்' எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை. எனவே, 'தீனா', 'பில்லா' போன்ற மிக பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்ய அடுத்த மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இக்கூட்டணி 2011-ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா' படத்தில் மீண்டும் இணைந்தது. அதுவரை வந்த அஜித்தின் மாஸ் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியது 'மங்காத்தா'. இந்தப் படத்தில் விநாயக் மகாதேவனாக வரும் அஜித்துக்கான தீம் மியூசிக்கில் யுவன் தெறிக்கவிட்டிருப்பார். அதேபோல் படத்தின் பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டடித்தன. இந்தப் படம் இக்கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து அஜித்தின் 'பில்லா II ', 'ஆரம்பம்' , 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' உள்ளிட்ட படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார். இதில் 'ஆரம்பம்' படமும், அப்படத்தின் பாடல்களும் வெகுவாக கவனம் பெற்றன. 'வலிமை' படத்தின் பாடல்களுக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தார்.

'புதிய கீதை' - அஜித்துடன் இத்தனைப் படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த யுவனுக்கு விஜய்யுடன் இணையும் வாய்ப்பு அவரது தந்தை இளையராஜா அளவுக்கு கிடைக்கவில்லை. அவருக்கு அஜித்துடன் இணையும் வாய்ப்பு யுவன் அளவுக்கு அமைந்திருக்கவில்லை. இந்தச் சூழலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68-வது படத்தில் அவருடன் களமிறங்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் யுவன். இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டில் வெளியான விஜய் நடித்த 'புதிய கீதை' திரைப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. அதேநேரம் 'மெர்குரி பூவே', 'வசியக்காரி' மற்றும் 'அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேன்டா' என அப்படத்தில் வெளிவந்த பாடல்களும் விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு தெரிந்த பாடல்களாக இருந்ததே தவிர பொதுவான ரசிகர்களைச் சென்று சேரவில்லை என்ற குறை பரவலாக இருந்து வருகிறது. இதே ஆண்டு யுவன் இசையில் வெளியாகிருந்த 'காதல் கொண்டேன்' திரைப்படம் மிகப் பெரிய மியூசிக்கல் ஹிட்டாகியிருந்தது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு: அந்த வருடம் விஜய் நடிப்பில் மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் வெளியாகி இருந்த 'வசீகரா' மற்றும் 'திருமலை' உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றதுடன், அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மேலும், நடிகர் விஜய் அடுத்துவந்த 20 வருடங்களில் எண்ணற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் படங்களைக் கண்டார். அதோடு அவரது படத்தில் வந்த பாடல்கள் அவரது அதிதீவீர ரசிகர்களை கடந்து குழந்தைகள், பெண்கள் என அனைவரும் கொண்டாடி மகிழும் ஒன்றாக மாறியிருக்கிறது. அதேபோல யுவனும் பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி, பல வெற்றிப் படங்களைத் தந்தார். குறிப்பாக இளம் தலைமுறையினரை பலருக்கு யுவனின் இசையும், பாடல்களும் வசியம் செய்திருக்கிறது. எனவே இதையெல்லாம் கணக்கில் கொண்டு, யுவன் இசையில் விஜய்க்கு மறக்கமுடியாத ஹிட் பாடல் இல்லை என்ற பரவலான மனக்குறையைப் போக்கும் வகையில் 'விஜய் 68' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், பின்னணி இசையும் அமைய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்