கார்த்தி பிறந்தநாள் | புதியவர்களுக்கு முகவரி கொடுக்கும் கலைஞன்!

By சல்மான்

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு பாணியை வகுத்து யாருடைய சாயலையும் பின்பற்றாமல் கமர்ஷியல் படங்கள் + பரிசோதனை முயற்சிகள் என தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று (மே 25).

அப்பா, அண்ணன் நடிகர் என்றாலும் எடுத்த எடுப்பிலேயே ‘நடிச்சா ஹீரோதான் பாஸ்’ என்று சினிமாவில் நடித்து விடவில்லை கார்த்தி. அமெரிக்காவில் எம்.எஸ் படித்துக் கொண்டிருந்தபோதே இன்னொரு பக்கம் இயக்குநர் ஆவதற்கான பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றார். படிப்பை முடித்து நாடு திரும்பியவர் மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் உதவியாளராக பணியாற்றினார்.

இயக்குநராவதையே லட்சியமாக கொண்டிருந்த கார்த்திக்கு நடிகராக அடையாளம் கொடுத்தவர் அமீர். 2007-ல் வெளியான ‘பருத்திவீரன்’ படம் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடித்து பட்டி தொட்டியெங்கும் கார்த்தியை கொண்டு போய் சேர்த்தது. ‘பராசக்தி’ சிவாஜிக்கு பிறகு முதல் படத்திலேயே அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர் என ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. கார்த்தியின் திரைவாழ்வில் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாகவும் ‘பருத்திவீரன்’ திகழ்கிறது. அப்படத்தில் நெஞ்சு வரை ஏற்றிக் கட்டிய வேட்டியும், முழங்கைக்கு மேல சுருட்டி மடித்த சட்டையும், பரட்டை தலை, மழிக்காத தாடி என அச்சு அசல் கிராமத்து முரட்டு இளைஞனாகவே மாறியிருந்தார். முதல் படம் என்ற சுவடே தெரியாமல் நடித்த கார்த்திக்கு முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதும், தமிழக அரசின் சிறப்பு விருதும் கிடைத்தன.

'பருத்தி வீரன்' படத்துக்குப் பிறகு தொடங்கி 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'காஷ்மோரா', 'மெட்ராஸ்', 'கைதி', ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என கமர்ஷியல் மற்றும் பரிசோதனை கதை களம் என இரட்டை குதிரைகளில் சீராக பயணம் செய்து வருகிறார் கார்த்தி. அவ்வப்போது சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அதை அவர் எப்போதும் பொருட்படுத்துவதில்லை. இன்னொரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் புது இயக்குநர்களை நம்பி தன்னை முழுமையாக ஒப்படைத்த முன்னணி நடிகர்கள் கார்த்தி அளவுக்கு யாரேனும் உள்ளனரா என்பது சந்தேகமே.

தெலுங்கில் ‘சவுர்யம்’, ‘சங்கம்’ என்ற இரு படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் சிவாவை அடையாளம் காட்டியது ‘சிறுத்தை’. ராஜமவுலியின் ‘விக்ரமார்க்குடு’வை ரீமேக் செய்த சிவா, ரவி தேஜா நடித்த இரட்டை கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது கார்த்தியை. படத்தில் அவரது முறுக்கு மீசையும், ஆகிருதியான தோற்றமும் அப்படத்துக்கான நம்பகத்தன்மையை அதிகரித்தது. ரவிதேஜாவை விட ஒருபடி மேலாகவே அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்திப் போயிருந்தார் கார்த்தி.

அடுத்து ‘அட்டக்கத்தி’ என்ற ஒரே ஒரு படத்தை எடுத்த புதிய இயக்குநரான பா.ரஞ்சித்தின் பெயர் தமிழ் திரையுலகில் இன்று தவிர்க்க முடியாத பெயராக மாறிப் போக களம் அமைத்துக் கொடுத்த படம் ‘மெட்ராஸ்’. ஒடுக்கப்பட்ட மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சாதி அரசியல் குறித்து பேசும் இப்படத்தில் வடசென்னையின் ஹவுசிங் போர்ட் குடியிருப்பு வாழ் இளைஞனாக தனது இயல்பான நடிப்பை வெளிபப்டுத்தியிருந்தார் கார்த்தி.

2017ஆம் ஆண்டு வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தமிழில் வெளியான க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒரு மைல்கல். ‘சதுரங்க வேட்டை’ மூலம் தன்னுடைய முத்திரையை பதித்துவிட்ட வினோத்தின் புகழை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்ற படம் இது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் துணிச்சலான காவல்துறை அதிகாரியாக கார்த்தி சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்துக்குப் பிறகுதான் எச்.வினோத்தின் கிராஃப் எகிறியது.

’மாநகரம்’ என்ற படம் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருந்தாலும், லோகேஷ் என்ற பெயரை பரவலாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் சென்றடையவில்லை. 2019ஆம் ஆண்டு பெரிதாக விளம்பரங்கள் எதுவுமின்றி வெளியான இப்படம் சினிமா ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தது. காரணம் ஒரே இரவில் நடக்கும் கதை, படத்தில் நாயகி இல்லை, முன்னணி காமெடியன் இல்லை, பாடல்கள் இல்லை. எந்தவொரு கமர்ஷியல் ஹீரோவும் நடிப்பதற்கு சற்றே யோசிக்கும் ஒரு கதைக்களத்தை அசாத்திய துணிச்சலுடன் தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டார் கார்த்தி. இப்படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் திரைப்பயணம் குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்படியாக வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்வதிலும், புதிய இயக்குநர்களை நம்பி படம் நடிப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை. இடையிடையே ’அலெக்ஸ் பாண்டியன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’தேவ்’ என சில சறுக்கல்களை சந்தித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார் கார்த்தி.

கார்த்தியின் திரைப் பயணத்தில் ’நான் மகான் அல்ல’ குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம். தன்னுடைய சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் கமர்ஷியல் அம்சங்கள் குறைந்த, டார்க் ஆன ஒரு கதைக்களத்தை துணிச்சலுடன் தேர்ந்தெடுத்தார். அதே போல தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாஸ் மசாலா கமர்ஷியல்களாக வரிசைக்கட்டிய நேரத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். அதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில், அந்த படத்தின் கதாபாத்திரம் போலவே நிஜவாழ்விலும் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர் கார்த்தி. விவசாயிகளின் நலனுக்காக ’உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பையும் தொடங்கியிருக்கிறார்.

இப்படியாக வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்வதிலும், புதிய இயக்குநர்களை நம்பி படம் நடிப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை. இடையிடையே ’அலெக்ஸ் பாண்டியன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’தேவ்’ என சில சறுக்கல்களை சந்தித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்த இலக்கை நோக்கிக் கொண்டே இருக்கிறார் கார்த்தி. வரவிருக்கும் ஆண்டுகளில் அவரது தேர்வுகள் இன்னும் சிறப்பாக அமைய இந்த பிறந்தநாளில் அவரது ரசிகர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE