“அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்” - ‘தி கேரளா ஸ்டோரி’ தடை குறித்து கங்கனா விமர்சனம்

By செய்திப்பிரிவு

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியல்ல என்றும் அது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் இரண்டாம் நாளே இப்படம் திரையிடப்படாது என்று மல்டிப்ளெக்ஸ் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்தன.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள ஒரு கோயிலுக்கு நடிகை கங்கனா ரனாவத் சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியல்ல என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், “மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைத் தடை செய்வது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது சரியல்ல. ஒரு திரைப்படத்திற்கு மத்திய அரசின் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்தால் அதை எதிர்க்கக் கூடாது.

‘தி கேரளா ஸ்டோரி' போன்ற படங்கள் உருவாகும்போதுதான் மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுன்றன. இதுபோன்ற படங்கள் திரைத்துறைக்கு உதவுகின்றன. மக்கள் பார்த்து ரசிக்கும் படங்களால் திரைத்துறையினருக்கு நன்மை மட்டுமே. இது போன்ற படங்கள் அதிகம் எடுக்கப்படுவதில்லை என்று பாலிவுட் மீது மக்களுக்கு எப்போதும் புகார்கள் உண்டு. எனவே இதுபோன்ற படங்கள் உருவாகும்போது, அவை வெகுஜன பார்வையாளர்களால் பாராட்டப்படுகின்றன.

இவ்வாறு கங்கனா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE