பகிர்தல் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எந்த ஓர் உணர்வையும் தன்னுள் புதைத்து வைத்திருக்க முடியாத மனித சமூகம், உணர்வுகளை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒலியாய் மொழியாய் தொடங்கிய இந்தப் பகிர்தல் இன்று காற்றலைகளில் பரவித் திரியும் ரீல்ஸாய், ஸ்டேட்டஸ்களாய் உருமாறியிருக்கின்றன. மனித வெளிப்படுத்தல்களுக்கு காரண காரியங்கள் கற்பிக்கப்படும்போது அது சடங்குகளாக நிலைபெற்றுவிடுகிறது. அப்படியான ஒரு சடங்குதான் விஷேச வீடுகளில் எழுதப்படும் ‘மொய்’ எனப்படும் தனிநபர் சீர். திட்டமிட்டு செய்யப்படும் சுபகாரியங்கள் தொடங்கி எதிர்பாராமல் நிகழ்கின்ற துக்க காரியம் வரை ‘மொய்’-க்கு முதலிடமுண்டு. விசேஷங்களில் விருந்துண்டு வெறுங்கையோடு செல்ல விரும்பாத தமிழ்ச் சமூகம், வாழ்த்துதோடு மட்டும் நில்லாமல் விழாச் செலவுக்கு கொஞ்சம் பொருள் (செல்வம்) கொடுத்துதவியது.
இத்தனை நீட்டி முழக்காமல் ‘மொய் விருந்து’ என்றால் இன்றைய தலைமுறையினருக்கு சட்டென்று விளங்கிவிடலாம். அந்த அளவுக்கு ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்துள்ளது ‘மொய் விருந்து’. திருப்பிச் செய்யவேண்டிய வட்டியில்லாத கடன்தான் அது என்றாலும் ‘மொய் விருந்து’க்கு பத்திரிகை அடிப்பது தொடங்கி ஆடு வெட்டி கறிவிருந்து சமைப்பது முதல் சில நூறுகளில் தொடங்கி பல ஆயிரங்களில் எழுதப்படும் மொய் என இந்த விருந்துக்கு பின்னால் நடக்கும் வேடிக்கை விநோதங்கள் அதனை அப்படி பிரபலமாக்கி வைத்திருக்கிறது.
தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் நடத்தப்படும் மொய்விருந்தின் நதிமூலம் மிகவும் வேதனையானது. நிதித் தேவையை பூர்த்தி செய்ய நடத்தப்படும் மொய் விருந்து, கடன் சுமைகளால் நொடிந்து போன ஒருவரின் நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ளவே நடத்தப்பட்டிருக்கிறது. வாழ வழியின்றி நிற்கும் சகமனிதனின் இயலாமையை ஊர்கூடி சுமக்கும் ஒரு சோகச் சடங்கான மொய் விருந்தின் உண்மை முகத்தை முதல்முறையாக வெள்ளித்திரையில் சொன்ன படம் சின்னக் கவுண்டர்.
» சினிமாபுரம் - 4 | கிராமத்து அத்தியாயம் - ‘பேய் பிடித்தல்’ அரசியலும், பெண்ணின் மனப் போராட்டமும்!
» சினிமாபுரம் - 5 | கர்ணன்: தனிமைக் காதலுக்கு அங்கீகாரம் தந்த சமகால காவியம்!
சின்னக் கவுண்டர் (1992): ஊரே மதிக்கின்ற, ஊருக்கே படியளக்கின்ற கிராமத்து பண்ணையார் தவசி. தலைமுறை தலைமுறையாக ஊரின் நாட்டாமைக்காரக் குடும்பம். தன் தந்தை பெரிய கவுண்டரின் மறைவுக்கு பின்னர் அவரின் இடத்தில் இருந்து ஊருக்கு தீர்ப்பு வழங்கும் நாட்டாமைக்காரர் என்பதால் இவர் சின்னக் கவுண்டர். இவரது பஞ்சாயத்துக்கு வரும் எந்த வழக்கிலும் நீதி கட்டாயம் நிலைநாட்டப்படும்.
இப்படியான நல்லவர் ஒருவருக்கு எதிரியாக இருக்கிறார் அவரின் அக்கா மாப்பிளை சக்கரை கவுண்டர். அவரும் ஊரின் பெரிய தலைக்கட்டுதான். தோட்டம் தொறவு எல்லாம் இருந்தாலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது இவரது உபதொழில். ஊருக்கு வேலைக்கு வந்த செவிலியரான சுந்தரியை சக்கரை கவுண்டர் விரும்பி சேர்த்துக்கொண்டு இரண்டாவது மனைவியாக்கி கொள்கிறார். இதற்காக முதல் மனைவியான சின்னக் கவுண்டரின் அக்காவைக் கொன்றுவிடுகிறார். அக்காவின் அகால மரணம் மாமன் - மச்சானுக்கு இடையில் பகையை ஏற்படுத்துகிறது. இந்தப் பகைக்கு மேலும் தூபம் போடுகிறது. பதினெட்டுபட்டிக்குச் சொந்தமான மாகாளியம்மன் கோயில் நிலம் தொடர்பான வழக்கு.
மாகாளியம்மன் கோயில் கட்டியிருக்கும் நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அதனை அந்த நிலத்தின் உரிமையாளரான சங்கரபாண்டி வாத்தியார் தன் இரண்டாவது மனைவி சுந்தரிக்கு விற்றுவிட்டார் என்றும் கூறி கும்பாபிஷேகத்தன்று கோயிலை பூட்டி விடுகிறார் சக்கரை கவுண்டர். வழக்கு பஞ்சாயத்துக்கு வருகிறது. பஞ்சாயத்தில் மருமகனுக்கு எதிராக சரியான தீர்ப்பு வழங்க முடியாத பெரிய கவுண்டர் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார்.
15 ஆண்டுகளாக தீர்க்கப் படாத இந்த வழக்கு சின்னக் கவுண்டர் பஞ்சாயத்துக்கு வருகிறது. கோயில் இருக்கும் இடம் புறம்போக்கு நிலம் என ஊரார் சொல்ல, சங்கரபாண்டி வாத்தியார் அதை விற்றதற்கான ஆதாரமாக கிரையப் பத்திரத்தை எடுத்துக் கொடுக்கிறது சக்கரை கவுண்டர் தரப்பு. வழக்கை தீர விசாரித்த தவசி, பத்திரம் போலி என்பதை சபைக்கு நிரூபித்து கோயில் நிலத்தை மீட்கிறார். இப்படி மாமன் - மச்சான் பகை வளர்த்து கொண்டே போகிறது.
இதற்கிடையில், ஊரில் ஆடு மேய்க்கும் பெண்ணான தெய்வானை சின்னக் கவுண்டரை காதலிக்கு திருமணம் செய்து கொள்கிறார். சின்னக் கவுண்டரை பழிவாங்க அவர் மனைவி தெய்வானையை பொய் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறது சக்கரை கவுண்டர் கூட்டம். ஊரைக் காப்பாற்றும் சின்னக் கவுண்டர் மனைவியை மீட்டாரா? சக்கரை கவுண்டர் தரும் தொடர் தொல்லைகளிலிருந்து எப்படி மீண்டார் என்பது மீதிக் கதை.
சின்னக் கவுண்டரும் கிராமத்து விளையாட்டும்: இயற்கையின் பருவநிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவை கிராமங்கள். வேலை, திருவிழாக்கள் தொடங்கி சிறுவர்களின் விளையாட்டு வரை பருவ காலங்களை ஒட்டியே இருக்கும். அப்படி கிராமங்களில் விளையாடப்படும் சீசன் விளையாட்டுகளில் பிரபலமான ஒன்று பம்பர விளையாட்டு. கூம்பு போன்ற வடிவில் உச்சியில் பொட்டு கொண்டை, கீழே ஒற்றையாணி காலுடன் இருக்கும் பம்பரத்தின் விலா இடையில் சாட்டையை (நூல் கயிறு) இறுக்கிச் சுற்றி, சாட்டையின் கடைசி நுனியினை மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையில் சொறுகி, பம்பரத்தை தலைகீழாகப் பிடித்து ஓங்கி தரையில் குத்தி சுழலவிட வேண்டும். இதில் பம்பரத்தை தரைக்கு அனுப்பாமல் அந்தரத்திலேயே வீசி இழுத்து உள்ளங்கையில் சுழல வைத்து வித்தை காட்டத் தெரிந்தவர்கள் விளையாட்டு ஜித்தர்கள்.
இந்தப் பம்பர விளையாட்டில் இரண்டு முறை உண்டு. அதிலொன்று ‘அபேஸ்’. ஒரு வட்டம் வரைந்து அதில் ஒரு பம்பரத்தை வைத்து, உள்ளிருக்கும் பம்பரத்தை மற்றவர்கள் தங்களின் பம்பரத்தால் குத்தி வெளியே எடுக்க வேண்டும். இந்த முயற்சியில் பம்பரம் ஆடாமல் போனால், ஆடாத பம்பரமும் வட்டத்திற்குள் வர வேண்டும். பம்பரத்தை வட்டத்திற்குள் குத்தி வெளியே ஆட விட்டு, அதைக் கையில் ஏந்தி (எடுத்து), மற்ற பம்பரங்களை தட்டியும் வெளியே எடுக்கலாம். இதில் ஒரு சிக்கல் உண்டு. பம்பரத்தை வட்டத்திற்குள் குத்தும் போது அது வெளியே வராமல் சில நேரத்தில் வட்டத்திற்குளேயே நிலைகொண்டு ஆடும். அப்படி ஆடும் போது வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்திற்குச் சொந்தக்காரர் உங்கள் பம்பரத்தை வட்டத்திற்குள் பிடித்து அமுக்கி விட்டால் நீங்களும் உள்ளேதான் இருக்க வேண்டும். இன்னொன்று கையில் தூக்கித் தட்டும் போது பம்பரம் வெளியே வரவில்லையேன்றாலும் வட்டத்திற்குளேயே இருக்க வேண்டும்.
இந்த விளையாட்டில் சுவாரஸ்மான ஒன்று, தோற்றவர்களின் பம்பரத்திற்கு வழங்கப்படும் தண்டனை. அதற்கு ‘ஆக்கர்’ என்று பெயர். பம்பரத்தின் ஆணியை வைத்து தோற்றவரின் பம்பரத்தில் ஓங்கி குத்தி ஓட்டைப் போடுவதற்கு பெயரே ஆக்கர். பொதுவாக பம்பரத்தின் நடுவில்தான் குத்த வேண்டும்; அப்போது தான் ஆக்கர் நன்றாக விழும், ஆனாலும் எதிராளியின் மீது வன்மம் அதிகமாகும்போது ஆணியால் பம்பரத்தின் பக்கவாட்டி குத்தி செதில் எடுக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு.
தெய்வானையிடம் சின்னப் பையன்கள் ஆக்கர் வைக்க வேண்டாம் என்று கொஞ்சுவது தொடங்கி, அவள் பம்பரத்தை பிடித்து அதன் நெற்றியில் முத்தமிடுவது, பம்பரம் விடத் தெரியாத தவசிக்கு சிறுவர்கள் சொல்லிக்கொடுக்கும்போது பேசும் வார்த்தைகள் என இந்த அத்தனை நுணுக்கங்களும் சின்னக் கவுண்டர் படத்தில் சில நிமிட நேரங்களில் பதிவாகியிருக்கும். இத்தனை மெனக்கிட்ட இயக்குநர் வணிக யுக்திகளுக்காக தவசி தெய்வானையின் தொப்புளில் பம்பரம் விடுவது எனக் காட்சிபடுத்தியிருப்பது, படத்தை நினைவுகூர நன்றாக இருந்தாலும் நெருடலே!
மாட்டுவண்டி ஊர்வலம்: படத்தில் பழைய கிரமாங்களை நினைத்து பார்ப்பதற்கான விஷயமாக மாட்டு வண்டியைச் சொல்லலாம். இருசக்கர வாகனம், கார், பேருந்துகள் இவ்வளவு அதிகம் இல்லாத அந்த காலத்து கிராமங்களில் போக்குவரத்துக்கான சாதனம் மாட்டுவண்டியே. அதிலும் குறிப்பாக மரச்சக்கரம் கொண்ட மாட்டுவண்டி. பின்னாடி எத்தனை பாரம் ஏற்றினாலும் அது வண்டியிழுக்கும் மாடுகளை பாதிக்காத அளவிலான இதன் வடிவமைப்பு பாரமக்களின் தொழில்நுட்ப அறிவுக்கான உச்சம். படத்தில் இரண்டு விதமான மாட்டுவண்டிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பணக்காரர்கள் மழை வெயிலுக்கு பாதுகாப்பாய் வசதியாக செல்வதற்கு வில்லு வண்டி (கூண்டு வண்டி), மற்றொன்று விவசாயப் பயன்பாட்டுக்கான பொதுவான மாட்டுவண்டி. இன்று இந்த இரண்டும் காட்சி பொருள்களாகி விட்டன.
மொய் விருந்தின் மறுபக்கம்: அம்மா அப்பா இல்லாதவள் தெய்வானை. ஆடு மேய்க்கும் பெண். துள்ளித் திரிந்து வந்தாள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆதரவு டவுனில் தங்கி ஆசிரியருக்கு படிக்கும் தங்கை மட்டுமே. ஆதரிக்க யாரும் இல்லாவிட்டாலும் வைராக்கியத்திற்கு மட்டும் குறையே இல்லாதவள். அதனாலேயே தான் கஷ்டப்பட்டாலும் தங்கையை படிக்க வைத்து அழகு பார்த்தாள். தனது பருவ ஆசைகளை எல்லாம் சுட்டித்தனத்திற்குள் ஒளித்துவைத்து தங்கைக்காக உயிர்வாழ்ந்தாள். அப்படிபட்ட தங்கையின் மீது சக்கரை கவுண்டரின் மச்சான் (சுந்தரியின் தம்பி) தவறான பார்வை விழுகிறது. அதனைத் தட்டிக் கேட்பவளுக்கு பேரிடியாய் வந்து விழுகிறது சக்கரை கவுண்டரின் வட்டி கணக்கு.
தங்கையின் படிப்புக்காக அவரிடம் சிறு தொகை கடன் வாங்கியிருக்க அது வட்டி,குட்டி எனப்பெருகி கையை மீறி நிற்கும். உடனே திருப்பித் தரச்சொல்லி சக்கரை கவுண்டர் மிரட்ட அவர்களின் கோர பிடியிலிருந்து தன்னையும் தங்கையையும் தற்காத்துக் கொள்ள மொய் விருந்து வைக்க முடிவு செய்வாள் தெய்வானை. தெய்வானை மொய் விருந்து வைத்திருப்பது முதலில் தமுக்கைறைந்து சொல்லப்படும். அடுத்த அவளே வீடு வீடாக சென்று தன் இயலாமையைச் சொல்லி மொய் விருந்துக்கு அழைப்பாள். அப்போது சின்னக் கவுண்டரின் வீட்டின் முன்னாள் நின்று என்னைக் கைவிட்டுட்டலா என்பது போல் அந்த வீட்டைப் பார்த்துவிட்டு தாண்டிச் சென்றுவிடுவாள்.
அப்போது சின்னக் கவுண்டரின் அம்மா, தரையில் அமர்ந்து வாசலுக்கு முதுகை காண்பித்து வெற்றிலை இடித்துக் கொண்டிருப்பார். தவசி மன சஞ்சலத்துடன் அம்மாவின் எதிரில் ஊஞ்சல் அமர்ந்திருப்பார். அந்த நேரத்தில் தவசியின் அம்மா பேசும் வசனம் மொய் விருந்தின் மற்றொரு முகத்தை நமக்கு உணர்த்தும். "கஞ்சிக்கே வழியில்லாதவா... காய்கறி போட்டு மொய் விருந்து வைக்க என்னடா பண்ணுவா" என்று கேட்பார். மொய் விருந்து என்பது கொண்டாட்டத்துக்கானது இல்லை. நொடிந்துபோனவர்கள் நீதிமன்றங்களில் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது போல... கிராமங்களில் மஞ்சள் நோட்டீஸுக்கு பதிலாக இருந்த நடைமுறை இந்த மொய் விருந்து என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
சாதியை தூக்கிப் பிடிக்கும் சினிமாவின் முன்னோடி: இந்தப் படத்தின் வெற்றிகளுக்கான காரணங்களில் ஒன்று செந்தில் - கவுண்டமணியின் நகைச்சுவை. ஊருக்கு துணிவெளுக்கும் குடியானவர்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இவர்களின் கதாபாத்திரம் கிராமத்தின் சில நிஜங்களை தோலுரித்துக்காட்டியிருக்கும். சக்கரை கவுண்டர் வீட்டில் அவரது மூத்த மனைவியின் மகளுக்கு நடக்கும் கொடுமைகளை தவசியின் அம்மாவுக்கு வந்து சொல்பவர்கள் இவர்களே. இது சக்கரை கவுண்டர் வீட்டிற்கு தெரிந்திருந்தும் அவர்களைத் தடுக்க முடியாது. அதேபோல இந்த இரண்டு கதாபாத்திரமும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஆதிக்கம் செய்பவர்களை எள்ளி நகையாட தவறுவதில்லை. சினிமாவில் காட்டப்பட்டிருப்பது போல சாத்தியமில்லை என்றாலும் அந்த கதாபாத்திரங்கள் சில நிஜங்களையும், சில தேவைகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கும்.
இந்தப் படத்தை பற்றி இவ்வளவு விஷயங்களை நினைவுகூர முடிகிற நேரத்தில் ஆதிக்கம் செய்பவர்கள் எல்லாம் நல்லவர்கள், அவர்கள் எப்போதும் தங்களுடைய கூலிகளின் நலன்களைப் பற்றியே சிந்திப்பார்கள் என்று மிகைப்படுத்தும் போக்கிற்கும்... மாற்றப்பட வேண்டிய கிராமத்தின் சில பல சம்பிரதாயங்களை கலாச்சாரம் என்று தூக்கிப்பிடிக்கும் இன்றைய தமிழ் சினிமாவிற்கு முன்னத்தி ஏராய் பாதை அமைத்துக் கொடுத்தது இந்தப் படமே... அதற்கான சாட்சி இந்தச் சம்பவம்...
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், 1992-ம் ஆண்டு வெளியாகி 250 நாட்களுக்கும் அதிகமாக ஓடியது இந்தப் படம். அதைப் பார்த்த ரஜினி இதேபோல தனக்கும் ஒரு கிராமத்து கதை பண்ணச்சொல்லி கேட்டு அவருக்குகாக ஆர்.வி.உதயகுமார் செய்த படமே ‘எஜமான்’ என்பது தமிழ் சினிமா வரலாறு.
முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 7 | மதயானைக்கூட்டம் - ஆணாதிக்கத்தால் வாதை சுமந்த பெண்களின் கதை!
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago