மகேந்திரனின் அழகிய மனசாட்சியை பிரதிபலித்த சரத்பாபு - சில நினைவலைகள்

By குமார் துரைக்கண்ணு

தமிழ் சினிமா ரசிகர்களின் நாஸ்டாலஜியை கிளறும் ஆல்டைம் பேஃவரைட் திரைப்படங்கள், அல்லது பிரபல இயக்குநர்கள், நடிகர்களின் வெற்றிப் படங்களை பட்டியலிட்டால், அத்திரைப்படங்களில் நடிகர் சரத்பாபு தவிர்க்க முடியாதவராக இருப்பார். அதிலும் தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு கொண்டு சேர்த்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனின் அழகிய மனசாட்சியாக சரத்பாபு திரையுலகில் அறியப்பட்டார். இயக்குநர் மகேந்திரனும் சரத்பாபுவை மனதில் வைத்தே குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை எழுதியதாகவும் கூறியிருக்கிறார்.

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் சரத்பாபு நடித்து வந்திருந்தாலும், 1978ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படம் சரத்பாபுவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

அந்தப்படத்தில் இன்ஜினியர் குமரனாக வரும் சரத்பாபுவுக்கும், காளியாக நடித்திருக்கும் ரஜினிகாந்தும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் அத்தனைக் காட்சிகளும் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத நினைவுகளை மனதில் விதைத்தவை. ரஜினியோடு பின்னாட்களில் அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், முள்ளும் மலரும் காலத்தால் அழிக்கமுடியாத நினைவுகள் பொதிந்தவை.

மகேந்திரனின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக இதுநாள்வரை திரை உலகம் கொண்டாடித் தீர்க்கும் உதிரிப்பூக்கள் திரைப்படம். இந்தப்படத்தில், ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் சரத்பாபு கதாப்பாத்திரம் எளிதாக கடந்துவிட முடியாத பாத்திர படைப்பு அது. கொடூர மனநிலைக் கொண்ட கணவனுடன் தினந்தோறும் செத்து செத்துப் பிழைக்கும் அந்த அஷ்வினி கதாப்பாத்திரம் போல வாழும் பலருக்கு சரத்பாபுவின் கதாப்பாத்திரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆறுதலை தந்திருக்கும். விஜயன், அஷ்வினி, சரத்பாபு என இந்தப் படத்தில் அனைவருமே தங்களது நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருப்பர். மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட என சரத்பாபு தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட்டுகளில் தவிர்க்கமுடியாதவராக மாறிப்போனார்.

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில், ரஜினிக்கு விபத்தில் கை போனபிறகு, ரஜினியும் சரத்பாபுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சி ஒன்றுவரும். சரத்பாபு ரஜினி இருவரும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சியின் முடிவில், "சார், ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக்கூட காளிங்கிறவன் பொழச்சுக்குவான் சார்... கெட்ட பையன் சார் அவன்" என்று ரஜினி கூறும் டயலாக் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த காட்சியில் எதிர்முனையில் காளியின் கோபத்தை உள்வாங்கும் சரத்பாபுவின் நடிப்பையும் பேச வேண்டும்தானே.. அடக்கமுடியாத ஆத்திரத்துடன், சரத்பாபு அறைக்குள் நுழையும் ரஜினியிடம் நலம் விசாரித்து பேசும் அந்தக் காட்சி சரத்பாபு இல்லாமல் முழுமை அடைந்திருக்காது. காளியின் கெத்தைக் குறைக்காமல், காளி மீதான அக்கறையை குமரன் கதாப்பாத்திரத்தின் ஊடே ஆணித்தரமாக பதிவு செய்திருப்பார் சரத்பாபு.

அதேபோல், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற செந்தாழம்பூவில் பாடல், இன்றளவும் பலருக்கு பயணங்களின்போது தவிர்க்க முடியாத பாடலாக இருந்துவருகிறது. இளையராஜவின் இசையில் ஜேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் காலம் கடந்தும் பலரது நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதற்கு இவர்கள் இருவர் மட்டுமின்றி, சரத்பாபுவின் சாந்தமான முகமும், அவரது பாங்கான நடிப்பும்கூட ஒரு காரணம்.

'உதிரிப்பூக்கள்' திரைப்படத்தில், விஜயனிடம் சரத்பாபு அஷ்வினியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்கும் காட்சி வரும். விஜயன் அமைதியாக சரத்பாபு பேசுவதைக் கேட்டுவிட்டு நகரும்போது, அவரை தோளில் தொட்டு நிறுத்தம் சரத்பாபு, "ஊரைவிட்டுத் தள்ளுங்க, தனிப்பட்ட முறையில நான் கெஞ்சிக் கேட்டுகிறேன். உங்க மனைவியை நீங்கள் ஏத்துக்கங்க, ப்ளீஸ்" என்பார். அடுத்த காட்சியில் சரத்பாபு வாயின் ஓரம் ரத்தம் கசிந்திருக்கும், அவர் அணிந்திருந்த கண்ணாடி கீழே கிடக்கும். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் விஜயன் முன்வரும் சரத்பாபு, "நான் உங்களத் திருப்பி அடிச்சிருப்பேன், ஆனா லட்சுமி விதவையாகிறதை நான் விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருப்பார். மாஸான மறக்கமுடியாத காட்சி அது. மகேந்திரனின் அழகிய மனசாட்சி சரத்பாபு என்பதற்கான காட்சி அது.

முள்ளும் மலரும் திரைப்படத்துக்குப் பின்னர், சரத்பாபு நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், 1987ல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய வேலைக்காரன் திரைப்படத்தில் ராஜ்குமார் என்ற பணக்கார கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அவரது ஹோட்டலில் வேலைக்காரராக ரஜினிகாந்த் நடித்திருப்பார். நடிகர் ரஜினிகாந்த்தின், ரசிகர்கள் அவருக்காக எதையும் செய்ய காத்திருந்த காலம் அது. இதனால், அவரைத் திட்டுவது,அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க நடிகர்கள் பலரும் தயங்கினர். ஆனால், ரஜினியும் சரத்பாபுவும் ஒன்றாக நடித்த திரைப்படங்களான வேலைக்காரன், முத்து, அண்ணாமலை இந்த படங்களில் எல்லாம் சரத்பாபு ரஜினியை அடித்துவிடும் காட்சி அல்லது திட்டிவிடும் காட்சிகள் இருந்தன. ஆனால், திரைப்படத்தைத் தாண்டிய ரஜினி-சரத்பாபுவின் நட்பு அத்தைகய காட்சிகளை ரசிகர்களை ஏற்றுக் கொள்ளச் செய்திருந்தது.

குறிப்பாக அண்ணாமலை திரைப்படத்தில், ரஜினியின் நண்பனாக அசோக் கதாப்பாத்திரத்தில் வரும் சரத்பாபுவை யாரும் மறக்கமாட்டார்கள். உண்மையான நண்பர்கள் இருவர் சண்டை போட்டு பிரிந்த உணர்வையே அந்தப்படத்தில் வரும் காட்சிகள் கொடுத்திருக்கும். முத்து படத்தில் வரும் முதலாளி கதாப்பாத்திரமும் அப்படித்தான். இந்த காட்சிகளில் எல்லாம் சரத்பாபுவைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும், அது பொருத்தமானதாக இருந்திருக்காது.

நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல, கமல்ஹாசனின் பல முக்கியமான திரைப்படங்களிலும் சரத்பாபு இடம்பெற்றிருப்பார். கமலின் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து இந்த இரண்டு படங்களும் படத்தின் நாயகனான கமல் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைத்துப் பாத்திரங்களையுமே ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்த திரைப்படங்கள். இந்த இரண்டு படங்களிலும் கமலுடன் இணைந்து சரத்பாபு நடித்திருப்பார். கமல்ஹாசனுடன் சரத்பாபு தோன்றும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் ரசிக்கப்பட்டிருக்கும். இவர்கள் இணைந்திருப்பது போல் வரும் காட்சிகள் ரொம்பவே அழகானதாகத் தெரியும். நட்பை மையமாக வைத்து வெளிவந்த சட்டம் திரைப்படத்தில் இருவரும் நண்பராக நடித்தனர். தொடர்ந்து பல படங்களில் இருவரும் நடித்து வந்தனர். கால ஓட்டத்தில், ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் மாமனராக சரத்பாபு நடித்திருப்பார்.

இந்த வரிசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பகல்நிலவு. நேர்மையான இன்ஸ்பெக்டராக பீட்டர் கதாப்பாத்திரத்தில் சரத்பாபு நடித்திருப்பார். பெரியவராக வரும் சத்யராஜிடம் முறைத்துக் கொள்ளும் காட்சிகளிலும், முரளியுடன் நடுத்தெருவில் சண்டையிடும் காட்சிகளிலும் சரத்பாபு சிறப்பாக நடித்திருப்பார். ரேவதியிடம் பாசத்தைக் காட்டும் காட்சிகளிலும், ராதிகாவை காதலிக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பை தேவையான அளவில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பார்.

சரத்பாபுவின் அமைதியான தோற்றம் அவருக்கு நல்ல மனிதரை பிரதிபலிக்கும் பாத்திரங்களில் தோன்றும் வாய்ப்பையே அவருக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தது. உதாராணத்துக்கு நேர்மையான காவல்துறை அதிகாரி, மருத்துவர், இன்ஜினியர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் இதுபோன்ற உயர் பொறுப்புகளில் ஒரு படித்த மிடுக்கான அதிகாரி இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு சரத்பாபு மிகவும் பொருத்தமானவராக இருந்துவந்தார். அல்லது ஒரு பெரும்பணக்கார இளைஞர் என்ற பாத்திரத்துக்கும் சரத்பாபுதான் என்ற நிலைதான் இருந்து வந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி, கமல், என தலைமுறைகள் கடந்த நடிகர்களுடன் தனது திரை பயணத்தை பங்கிட்டுக் கொண்ட நடிகர் சரத்பாபுவை தமிழ்த்திரையுலகம் எப்போதுமே ஒரு ஜென்டில்மேனாகவே பார்க்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்