உறுதியானது விஜய் - வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். யுவன் இசையமைக்கிறார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் நடிக்கும் 68வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ‘பிகில்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு விஜய் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE