ஜூனியர் என்டிஆரின் புதுப் படத்தின் தலைப்பு ‘தேவரா’ - முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்திற்கு ‘தேவரா’ (Devara) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி, க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆர் ரத்தம் தோயந்த கத்தியை கையில் ஏந்தியபடி ஆக்ரோஷமாக நிற்கும் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE