பிச்சைக்காரன் 2 Review: ஆரம்பம் எல்லாம் அதகளம்தான். ஆனா..?

By கலிலுல்லா

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பர் அரவிந்த் (தேவ் கில்). அரவிந்த் தன் கூட்டாளிகளான இளங்கோ (ஜான் விஜய்) மற்றும் சிவாவுடன் (ஹரீஷ் பேரடி) இணைந்து விஜய் குருமூர்த்தியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகின்றார். இந்த சதித் திட்டத்தில் வந்து மாட்டிக்கொள்கிறார் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தும் சத்யா. திட்டமிட்டப்படி சத்யாவின் மூளை, குருமூர்த்தியின் உடலுடன் பொருத்தப்பட, வஞ்சகர்களின் சதித் திட்டம் பலித்ததா? சத்யாவுக்கான பின்னணி என்ன? - இதுதான் திரைக்கதை.

சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளையும், அதற்கான மூலக் காரணத்தையும், பணத்தை ஆயுதமாக கொண்டு ஏழைகளின் சூழலை தனக்கு சாதகமாக்கி கொள்பவர்களையும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் அவல நிலையையும் படம்பிடித்துக் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் ஆண்டனி. அவரது இந்த நோக்கம் பாராட்டத்தக்கது.

இந்தக் கதையைச் சொல்ல அவர் உருவாக்கியிருக்கும் புனைவுலகில் மூளை மாற்று அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக நடக்கின்றன. தவிர, ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி, குறைந்த விலையில் மளிகை பொருட்கள் தொடங்கி ரூ.25,000-க்கு வீடு வழங்குவது வரை கார்ப்பரேட் நிறுவனமே இப்படியான திட்டங்களை செயல்படுத்துவது என்ற புனைவுலக கட்டமைப்பு பார்வையாளர்களுக்கு நெருக்கத்தை தர மறுக்கிறது. அதுவும், பிச்சைக்காரர்களை கார்ப்பரேட் அலுலவகத்தின் போர்டு மீட்டிங் நடக்கும் அறையில் அழைத்துப் பேசுவது போன்ற காட்சிகள் என இந்த சிக்கல்களெல்லாம் இரண்டாம் பாதியில் உருவெடுக்கிறதே தவிர, முதல் பாதியில் முடிந்த வரை எங்கேஜிங்கான திரைக்கதை கொடுக்க முயன்றிருகிறார் இயக்குநர்.

மூளை மாற்று சிகிச்சை என்ற இன்ட்ரஸ்டிக் ஐடியா, அண்ணன் - தங்கை பாசம் பார்த்து பழகியதாக இருந்தாலும் அதை திரையில் காட்சிப்படுத்திய விதம், அமைதிப் பேர்வழியாக இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் ஆக்ஷனுக்கு மாறுவது, விறுவிறுப்பாக கடக்கும் சில ‘மாஸ்’ தருணங்கள், இன்டர்வல் ப்ளாக் என முதல் பாதி நம்பிக்கை விதைக்கிறது.

இந்த நம்பிக்கையை இரண்டாம் பாதி மொத்தமாக சீர்குலைப்பது பெரும் சிக்கல். டி.ராஜேந்திரன் போல படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பு செய்து தயாரிப்பு பணிகளையும் கவனித்துக்கொண்ட விஜய் ஆண்டனி இரண்டாம் பாதியையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். குறிப்பாக, படம் முழுக்க அப்பட்டமாக திரையில் தெரியும் பலவீனமான கிராஃபிக்ஸ் காட்சிகள் நெருடல். அதேபோல தலைமைச் செயலகம் என கூறி சென்னை மாநகராட்சி கட்டிடத்தை காட்டுவது, துபாய் காட்சிகளுக்கான இடத்தேர்வுகள் சினிமாவுக்கான ஆக்கம் சேர்க்கவில்லை.

ஏழைகளுக்கான அவல நிலைக்கு பணக்கார முதலாளிகளின் ஆதிக்கம்தான் காரணம் என்பதை திரைமொழியில் கடத்தாமல் பிரசாரமாகவே பேசியிருப்பது, ‘கரோனா காலத்தில் உயிருக்கு போராடும் மக்களிடம் பணம் கேட்டு மருத்துவத்தை வியாபாரம் ஆக்கினார்கள்’ உள்ளிட்ட வசனங்கள் எடுபடுகின்றன. அதற்காக வசனங்களாகவே சொற்பொழிவாற்றுவது அயற்சி. ‘ஆன்டி பிகிலி’ என்ற வார்த்தையும் அதற்கான அர்த்தமும் புதுமை சேர்க்க, முதல் பாகத்திலிருந்த தாய்ப் பாசத்தை, இந்தப் பாகத்தில் தங்கைப் பாசமாக மாற்றிய ஐடியாவும் கைகொடுத்திருக்கிறது.

குறிப்பாக, படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ‘ரமணா’, ‘நாயகன்’ தொடங்கி பல தமிழ் படங்களை நினைவுபடுத்துகின்றன. விஜய் ஆண்டனியை விடுவிக்க கோரி நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டியிருக்கும் கூட்டம், ‘இது முற்றிலும் வித்தியாசமான கேஸ்’ வழக்கறிஞரின் தேய்வழக்கு வார்த்தைகள் மற்றும் நீதிமன்ற காட்சிகள் க்ளீஷே.

‘நான்’ படம் தொடங்கி விஜய் ஆண்டனி தனது வழக்கமான ட்ரேட் மார்க் நடிப்பை கைவிடாமல் இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். இறுதியில் வரும் எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் அழுத்தம் கூட்டியிருக்கிறார். குறைந்த காட்சிகள் வந்தாலும் காவ்யா தாப்பர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு நடிப்பு கதையோட்டத்துக்கு பலம். மன்சூர் அலிகான் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் அதன் பின்னணி இசை. விஜய் ஆண்டனி தனக்கான ஏரியாவில் இறங்கி அடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது இசை ரசிக்கும்படியாகவே இருந்தது. ஓம் நாராயண் ஒளிப்பதிவில் புதுமை தென்படவில்லை.

மொத்தமாக ‘பிச்சைக்காரன் 2’ காட்சிகளில் சுவாரஸ்யத்துகான பஞ்சம் மிகுந்து இருந்த வகையில் மட்டுமே படத் தலைப்புக்கு நியாயம் சேர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE