இந்து மதத்துக்கு ஆதரவாக பேசுவதால் ஆண்டுக்கு ரூ.30- 40 கோடி இழப்பு: நடிகை கங்கனா ரணாவத்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்து மதத்துக்கு ஆதரவாகவும், சில அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பேசிவருவதால் தனக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.30 முதல் 40 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் பேட்டி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா பகிர்ந்திருந்தார். அதில் எலான் மஸ்க்: நான் விரும்பியதைத்தான் பேசுவேன். அதனால் எனக்கு பண இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

அதற்கான கேப்ஷனில் கங்கனா கூறியிருப்பதாவது:

இதுதான் உண்மையான சுதந்திரம் மற்றும் வெற்றி. இந்து மதத்துக்கு ஆதரவாகவும், சில அரசியல்வாதிகள், தேசவிரோதிகளுக்கு எதிராகவும் பேசியதால் 20-25 விளம்பர நிறுவனங்கள் என்னை ஒரே நாளில் நீக்கி விட்டார்கள். இதனால் எனக்கு ஆண்டுக்கு ரூ.30 - 40 கோடி இழப்பு ஏற்படுகிறது.

ஆனால் நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் விரும்பும் விஷயங்களை பேசுவதை விட்டு எதுவும் என்னை தடுக்க கூடாது. இந்தியாவையும், அதன் கலாச்சாரத்தையும் வெறுக்கக் கூடிய, அஜெண்டாவுடன் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களும் அதன் கார்ப்பரேட் தலைவர்களும் நிச்சயமாக அதை செய்யவே கூடாது. நான் எலான் மஸ்க்கை பாராட்டுகிறேன். ஏனென்றால் எல்லோரும் பலவீனங்களை மட்டுமே காட்டுகிறார்கள். குறைந்த பட்சம் பணக்காரராக இருப்பவர் பணம் குறித்து கவலைப்படக்கூடாது.

இவவாறு கங்கனா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE