வைரல் வீடியோ எதிரொலி: அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு ரூ.10,500 அபராதம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, விதி மீறியதாக கூறி அவரது பாதுகாவலருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதாகவும், சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘சாமானியர்களுக்கு மட்டும் தான் சாலை விதியா? பிரபலங்களுக்கு விதிவிலக்கா’ என விமர்சித்தனர். இதையடுத்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷர்மாவை ட்ரால் செய்த நெட்டிசன்களில் சிலர் விதிமீறல் புகாரின் அடிப்படையில் இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து மும்பை போக்குவரத்து காவல் துறைக்கு டேக் செய்திருந்தனர். இதில் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது ப்ளாக்கில், ‘அது படப்பிடிப்பு தளத்திற்குள் நடந்த சம்பவம்’ என கூறி எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலரான சோனு ஷேக் என்பவருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, “அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE