“பிச்சைக்காரன் கதையை பல ஹீரோக்கள் நிராகரித்தனர்” - இயக்குநர் சசி பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘‘'பிச்சைக்காரன்' கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாரும் இதை பிச்சைக்காரனின் கதையாக பார்த்து நிராகரித்தனர். விஜய் ஆண்டனி மட்டும்தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார்” என இயக்குநர் சசி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் புரமோஷன் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி , "பொது மேடைகளில் எங்களுடைய படம் பற்றி பெரிதாக நான் பேச விருப்பப்பட மாட்டேன். பொங்கல் அன்று நான் வீட்டில் இருந்த பொழுது மலேசியாவில் இருந்து எனக்கு கால் செய்து, 'விஜய் ஆண்டனிக்கு ஆக்சிடென்ட். தண்ணிக்குள் விழுந்துவிட்டார்' என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் என்னால் வேறு என்ன யோசிக்க முடியும்? உங்கள் அனைவருடைய பாசிட்டிவான எண்ணம் தான் அவரை மீண்டும் நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நல்ல பிரின்சிபல்களை கொண்டிருப்பவர் அவர். அவரை திருமணம் செய்து இருப்பதும் அவருடைய சினிமா கரியரில் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது" என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், “பிச்சைக்காரன்2’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டிய முடிவு. ஏனென்றால்,'பிச்சைக்காரன்' கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாரும் இதை பிச்சைக்காரனின் கதையாக பார்த்து நிராகரித்தனர். விஜய் ஆண்டனி மட்டும் தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார்.

இந்தப் படத்திற்காக சென்னை, பாண்டிச்சேரி என பல இடங்களில் இவர் பிச்சை எடுத்துள்ளார். பிச்சை எடுக்கும்போது என்ன மாதிரியான இசை வேண்டும் என அவர் கேட்ட போது எனக்கே குழம்பியது. அந்த இடத்தில் அவர் கேட்ட ஒரு கேள்விதான் முதல் 20 நிமிடத்திற்கான கதையை மாற்றியது. இசையமைப்பாளராக 'நூறு சாமிகள்' பாட்டையும் வெற்றிகரமாக தந்தார். நான் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல புது முகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அதுபோல, புதுமுக இயக்குநராக விஜய் ஆண்டனியை வரவேற்பதிலும் மகிழ்ச்சி" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE