சென்னை ஐஸ்ஹவுஸின் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்). தனது கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் கைகொடுக்காததால் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின் ஃபர்ஹானாவின் குடும்ப பொருளாதார சூழல் முன்னேற்றம் காண்கிறது. இதனிடையே தனது குழந்தைக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் ஃபர்ஹானாவுக்கு மேலும் பணம் தேவைப்படுவதால், அவர் வேலை செய்யும் கால் சென்டரில் 3 மடங்கு அதிகம் இன்சென்டிவ் கொடுக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொள்கிறார். அந்த வேலை ஃபர்ஹானாவின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இம்முறை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வழியாக முகமறியாதவர்களுடனான இணையவெளித் தொடர்பு உரையாடல்களில் இருக்கும் ஆபத்துகளையும், மனம் விட்டு பேசுவதன் முக்கியத்துவத்தையும் படைப்பாக்கியிருக்கிறார். இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் சென்னை ஐஸ்ஹவுஸின் நெருக்கடியான வீடுகளுக்குள் பிரவேசிக்கும் முஸ்லீம் பெண் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தையும், அவரைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் கோடுகளின் எல்லைகளையும் படம் பதிவு செய்கிறது. அந்தப் பெண்ணின் அக-மன வெளிச்சிக்கல்களை நோக்கி படம் நகரும்போது காட்சிகள் உயிர்கொள்கின்றன.
குறிப்பாக ஒரு பெண்ணுக்கான ‘பொருளாதாரா விடுதலை’யின் தேவையை உரைத்துக்கொண்டேயிருக்கும் படம் ஓரிடத்தில் சாலையோர பெண்மணியின் குரலின் வழியே அதன் அழுத்தத்தை கூட்டுவது ‘நச்’ ரகம். செல்வராகவனுடனான ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த மொத்த உரையாடலை கவிதைகளாக்கி ரசிக்க வைத்திருப்பது எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், சங்கர் தாஸ், நெல்சன் தீலிப்குமாரின் வசன மேஜிக். ‘எல்லா விதிக்கும் ஒரு விதி விலக்கு இருக்கு’, ‘நீ சொன்ன வார்த்தையோட அந்த நிமிஷம் கடந்து போகாத படி உறைய வைச்சிருக்கேன்’, ‘நான் இந்த போன கட்பண்ணிட்டா அடுத்து பேசுறவன் குரல் வழியாகவே உன்ன தடவி பார்ப்பான்’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
» மாமன்னன் | வடிவேலு கையில் பச்சை குத்தியிருப்பது யாருடைய முகம்?
» 6 இயக்குநர்கள்; 4 இசையமைப்பாளர்கள் | ‘மாடர்ன் லவ் - சென்னை’ ட்ரெய்லர் எப்படி?
அழுவது, எழுவது, பிரச்சினையை எதிர்கொள்ள போராடுவது, தனியொரு பெண்ணாக குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது என ஐஸ்வர்யா ராஜேஷை மறக்கடித்து ‘ஃபர்ஹானா’ மட்டுமே திரையை ஆக்கிரமித்திருப்பதால் கதையுடன் எளிதில் ஒன்ற முடிகிறது. தொப்பியும், தாடியுமாக அதிகம் பேசாமல் மௌனத்தாலேயே உணர்வைக்கடத்தும் புரிதல் கொண்ட கணவராக ‘ஜித்தன்’ ரமேஷ் நடிப்பில் அத்தனை யதார்த்தம். ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கும் செல்வராகவன் தன் குரல் வழியே ஆதிக்கம் செலுத்துவதுடன், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திப்போவது பலம். அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்த தவறவில்லை.
லாஜிக் மீறல்களும் முரண்பாடான கதாபாத்திரங்களும்தான் படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை. தன் மனைவியை வேலைக்கு அனுப்பும் அளவிற்கான புரிதல் கொண்ட ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம் மனைவியை வீட்டு லேண்ட்லைன் போனை தொட அனுமதிக்காமலிருப்பதும், ஐந்துவேளை தொழுகையுடன் தஹஜ்ஜத் தொழும் அளவிற்கான இறைபக்தி கொண்ட ஃபர்ஹானா கதாபாத்திரம் பணத்திற்காக தேர்ந்தெடுக்கும் தொழிலும், அந்த தொழிலில் ஆபத்துகளை அறிந்தும் அதில் தொடர்வதும் முரண். ஸ்மார்ட்போன் யுகத்திலும் ஃபர்ஹானா மொபைல் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து புரியவில்லை. பள்ளியில் கூட முஸ்லீம் குழந்தை ஹிஜாப் அணிந்திருப்பது, உருது பாதி தமிழ் பாதி என கலந்து பேசும் ‘அரிய’ இஸ்லாமியர் வீடு, இஸ்லாமியர் என்றாலே அவர் தலையில் நிச்சயம் தொப்பியும் ஜிப்பாவும் அணிருந்திப்பார்கள் போன்ற யதார்த்ததுக்கு மிகையான ‘ஸ்டீரியோடைப்’ காட்சிகள் 2023-லும் தொடர்வது நெருடல்.
முந்தைய தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்குமான வித்தியாசத்தை ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா மற்றும் கணவர் மூலம் காட்சிப்படுத்தியிருந்ததும், தன் மனைவி மீது பழி வந்தபின்பும் அதனை குர்ஆன், ஹதீஸின் வழியே எதிர்கொள்ளும் கணவர் கதாபாத்திரமும் பாராட்டுக்குரியது. சர்ச்சையான கொலைக்குப் பின்பும் கால் சென்டர் மீண்டும் இயங்குவதும், ஜித்தன் ரமேஷ் குடும்ப பொருளாதார சூழலை எதிர்கொள்ள எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததும், செல்வராகவன் கதாபாத்திரத்தின் பின்னணியில் தெளிவின்மை, தனியாளாக அவர் எப்படி எல்லாவற்றையும் கண்டறிகிறார் உள்ளிட்ட லாஜிக் சிக்கல்களும் இல்லாமலில்லை. தவிர, ஒரு கட்டத்தில் படம் அடுத்தடுத்து நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது அயற்சி.
ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை, காட்சிகளுக்குத் தேவையான பங்களிப்பில் கச்சிதம் சேர்க்கிறது. நெருக்கடியான வீடுகள், குறுகலான சந்து, பெரிய பள்ளிவாசல் என திருவல்லிக்கேணியை குறுக்கு வெட்டுத்தோற்றத்துடன் கோகுல் பினோயின் கேமரா பதிவு செய்திருக்கும் விதம் ஈர்ப்பு. லீனியரான கதை தான் என்றாலும் தனது கட்ஸ் மூலம் காட்சிகளை நேர்த்தியாக்கியிருக்கிறார் சாபு ஜோசஃப். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய குடும்ப பின்னணியிலிருந்து இந்த கதையை அணுகியிருப்பதற்கான தேவையையும், அதற்குரிய நியாயத்தையும் படத்தின் காட்சிகளோ, திரைக்கதையோ சேர்க்காமலிருக்கும் சூழலில் ‘ஃபர்ஹானா’வாக இந்தப்படம் உருவானது ஏன் என்ற கேள்வி இறுதி வரை தொக்கி நிற்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago