‘ஸ்டைல் வேணுமா, ஆக்சன் வேணுமா.. எல்லாம் உந்தி’ - தில் ராஜூ பாணியில் கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘கஸ்டடி’ மூலம் தமிழுக்கு வருகிறார், தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா. வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். அரவிந்த்சாமி, சரத்குமார் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது படக்குழு. ஹைதராபாத்தில் நடந்த பட விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் பேச்சு கவனம் ஈர்த்தது. வாரிசு படத்தின் வெளியீட்டு சமயத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, ‘பைட் வேணுமா பைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு...’ என்று பேசியது போல, வெங்கட் பிரபுவும், ‘கஸ்டடி’ விழாவில் பேசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

தில் ராஜூவின் பேச்சை தமிழும், தெலுங்கும் கலந்து இமிடேட் செய்யும் விதமாக விழாவில் பேசிய வெங்கட் பிரபு, "எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது" என்றவர், "இந்தப் படத்தில் ஸ்டைல் வேணுமா, ஸ்டைல் உந்தி. ஆக்சன் வேணுமா, ஆக்சன் உந்தி. ஃபர்பாமென்ஸ் வேணுமா, ஃபர்பாமென்ஸ் உந்தி. சென்டிமென்ட் வேணுமா, ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி. என்ன வேணுமோ, எல்லாம் உந்தி” என பேசவும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

அந்தநேரத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருந்த நாக சைதன்யா எதோ சொல்ல, மீண்டும் மைக்கை பிடித்த வெங்கட் பிரபு “மாஸ் வேணுமா, மாஸ் உந்தி” என்றார். தில் ராஜூவை கேலி செய்யும்விதமாக பேசிய வெங்கட் பிரபுவின் இந்தப் பேச்சு தொடர்பான வீடியோக்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE