போதைப்பொருள் சர்ச்சையில் மலையாள திரையுலகம்: நடிகர் டினி டாம் கருத்துக்கு தியான் ஸ்ரீனிவாசன் மறுப்பு

By செய்திப்பிரிவு

மலையாள திரையுலகில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக நடிகர் டினி டாம் தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவரது இந்தக் கருத்துக்கு மூத்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகனும், இயக்குநருமான தியான் ஸ்ரீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் 1998-ம் ஆண்டு வெளியான ‘கிராம பஞ்சாயத்து’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் டினி டாம். பல்வேறு படங்களில் நடித்த இவர் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தில் நடித்திருந்தார். அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடிகர் டினி டாம், “ஆபத்தான காலங்களை எதிர்நோக்கியுள்ளோம். என் மகனுக்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என் மகன் திரைத்துறைக்குள் செல்ல என் மனைவி அனுமதிக்கவில்லை. காரணம், மலையாள நடிகர்களிடையே போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நானுமே கூட போதைப்பொருட்களால் அடிமையான நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்துள்ளேன்” என கூறியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. டினி டாம் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள மூத்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகனும், இயக்குநருமான தியான் ஸ்ரீனிவாசன், “தனிநபர் போதைப்பொருளால் தன் வாழ்க்கையை அழிக்க நினைத்தால் அதை தடுக்க முடியாது. யாரும் யாரையும் போதைப்பொருட்களை பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதில்லை. போதைப்பொருளால் ஏற்படும் தீங்குகளை அறிந்த ஒருவர் நிச்சயம் அதனை பயன்படுத்தமாட்டார். இது தனிநபர் சார்ந்தது மட்டுமே. ஒருவரை வைத்து மொத்த திரையுலகையும் குற்றம் சாட்டமுடியாது” என்றார்.

போதைப்பொருள் பயன்பாடுகளால் மலையாள நடிகர்களான ஸ்ரீநாத் பாசி மற்றும் ஷேன் நிகம் இருவரும் நடிக்க மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சர்ச்சை எதிரொலியாக “மலையாள படங்களின் படப்பிடிப்பு தளத்தில் காவல் துறையினர் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் சோதனையும் செய்யப்படும்” என கொச்சி காவல்துறை ஆணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE