“பாரதிராஜா முதலில் என்னை அடிக்கத் தயங்கினார்” - படப்பிடிப்பு சுவாரஸ்யம் பகிர்ந்த கவுதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

“ஒரு காட்சியில் பாரதிராஜா என்னை அடிக்க வேண்டும். முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்” என இயக்குநரும் நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவுதம் வாசுதேவ் மேனன், “தங்கர் பச்சான் கேட்டு என்னால் நோ என்று சொல்ல முடியாது. பாரதிராஜா தான் இந்தப் படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதை விட இயக்குவது தான் சுலபம். இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜாவுக்கு ஒரு தேடல் இருக்கும். அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றை தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜாவுக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா என்னை அடிக்க வேண்டும். முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன். தங்கர் பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் தான் இப்படத்தில் நான் இருக்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபுவிடம், “16 வயதினிலே' படத்தில், சப்பாணி, பரட்டை, டாக்டர் இந்த மூன்று கேரக்டரில் நீங்கள் நடித்தால் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள்?” என கேட்கப்பட்டது. அதற்கு, “டாக்டர் கேரக்டர்.. மயில் வாழ்க்கையை ஏமாத்திட்டு போய்விட்டார். அது வேண்டாம். எனக்கு ரஜினி நடித்த 'பரட்டை' கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புவேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE