கதாநாயகனாக அறிமுகமாகிறார் 'பிக்பாஸ்' அசீம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிக்பாஸ் ஆறாவது சீசனின் வெற்றியாளர் அசீம் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் தமிழ் சீரியல் நடிகர் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே அசீம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்ததால், அவரது வெற்றி குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது அசீம் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், கிராமத்துப் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கான லொக்கேஷன் தேடும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE