“பள்ளிக்கூடம் படத்தை பாராட்டுகின்றனர்; ஆனால் பாக்ஸ் ஆபீஸில்?” - தங்கர் பச்சான் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

“நான் எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுபிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போது யார் குற்றவாளிகள்?” என்று தங்கர் பச்சான் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான், “தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் ஒரு நண்பரை சந்திக்க காத்திருந்தேன். அப்போது கோயில் வாசலில் இருவர் அங்கு அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு உலகத்தை விட்டே போய் விட வேண்டும், வாழவே விருப்பமில்லை என்ற முகம். அவர் கையில் யோகிபாபு கையில் வைத்திருப்பது போல ஒரு பை வைத்திருந்தார். அதற்கு நேர்மாறாக.. இன்னொருவரும் அதே மனநிலையில் இருப்பவர். ஆனால் அவர், வாழ்க்கையில் உயர்ந்த பதவியில் இருப்பவராக தோன்றியது.

இருவர் முகமும் எழுதப்படாத, உச்சரிக்கப்படாத ஒரே உணர்வை எனக்கு கூறியது. கோயிலில் இருந்து ஒருவர் பிரசாதம் கொண்டு வந்து தருகிறார். அந்த ஏழை வாங்கிக் கொள்கிறார். ஆனால், அந்த பணக்காரர் தன்மானம் காரணமாக வாங்க மறுக்கிறார். பிறகு வாங்கிக் கொள்கிறார். அன்று இரவு வீட்டிற்கு செல்லும்போது இந்த இரு மனிதர்களும் என்னை பாதித்தார்கள். அப்போது தான் இந்த கதையை எழுதினேன். ‘கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன’ என்று தான் பெயர் வைத்தேன். ஆனால், கருமேகங்கள் கலைகின்றன என்று மாறியது. ஆனால், இதையும் 'கேகே' என்று மாற்றி விடுகிறார்கள். தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது.

வாழ்ந்து முடித்த ஒருவர், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து அன்புக்காக ஏங்கும் மற்றொருவர் இந்த இரண்டு பேர் போல உலகம் முழுக்க இருக்கிறார்கள். அன்புக்காக ஏங்கி தவிக்கிறார்கள். யாருக்கும் யார் மீதும் அன்பு இல்லை. அதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். எல்லா ஊர்களிலும் சென்று வியாபாரம் செய்வது சிறந்த படமல்ல. எல்லா ஊர்களிலும் உள்ள மக்களைப் பற்றி எடுக்க வேண்டும். ஆனால், தரமான படங்களை யார் கொண்டாடுகிறார்கள். மக்கள் நல்ல படங்கள் திரையரங்கில் பார்க்கக் கூடாது, வீட்டில் தான் பார்க்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். இது போன்ற நல்ல படங்களை திரையரங்கில் வந்து பார்த்தால் இன்னும் இது போன்ற பல படங்களை இயக்குவேன். மக்களின் வாழ்வியலை சொல்லும்படியாக என்னிடம் பல கதைகள் இருக்கிறது.

நான் எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுபிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போது யார் குற்றவாளிகள்?. ‘கருமேகங்கள் கலைகின்றன’ அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். இந்தப் படத்தில் எல்லோரும் என்னைத் திட்டியிருப்பார்கள். பாரதிராஜா அண்ணன் இன்னமும் என்னை இப்படி செய்து விட்டான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான். யோகிபாபு இன்னும் 5 நாள் இருந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனால், அவரை குறைகூற இயலவில்லை. அவ்வளவு படங்கள் வைத்திருக்கிறார். 3 நாட்கள், 5 நாட்கள் என்று டேட் கொடுத்து பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE