தீர்க்கதரிசி: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி வரும் மர்மக் குரல், கொலை, கொள்ளை, திட்டமிட்ட விபத்து என பல குற்றச் செயல்கள் அடுத்தடுத்து நடக்கப் போவதாகவும் தடுக்கும்படியும் தகவல் கொடுக்கிறது. முதலில் அலட்சியப்படுத்தும் காவல்துறை, குரல் சொன்னது அப்படியே நடக்க, மர்மக் குரல் மனிதரைத் தேடிகொண்டே, குற்றச் செயல்களைத் தடுக்கவும் ஓடுகிறார்கள். அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததா, நடக்கப்போகும் நிகழ்வுகள் அவருக்கு மட்டும் எப்படி முன்னதாகத் தெரிய வருகின்றன என்பது கதை.

தலைப்பை நியாயப்படுத்தும் ஒருவரிக் கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை எழுத முயற்சித்திருக்கிறார் பி.சதீஷ்குமார். ஆனால், மர்மக் குரலுக்கும் காவல் துறைக்கும் இடையிலான இந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ ஓட்டம் ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. அதற்குத் தர்க்க ரீதியாக விலகல்கள் இருப்பது ஒரு காரணம். இருப்பினும் அந்த மர்மக் குரலை மிடுக்குடன் ஒலிக்க வைத்து, நடக்கப்போகும் சம்பவங்களைக் காட்சிப்படுத்திய விதத்தால் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இக்குறைகளைச் சமாளித்திருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும் ரஞ்சித் சி.கே.வின் படத்தொகுப்பும் ஈடுகட்ட முயன்றுள்ளன.

சி.சி.டி.வி பதிவு, ஜி.பி.எஸ்ட்ராக்கிங், கால் ட்ராக்கிங் ஆகியவற்றையே காவல்துறை அதிகமும் நம்பியிருப்பது, இவற்றைப் பலமுறைப்பார்த்துச் சலித்தப் பார்வையாளர்களுக்கு அவையே பெருந்துன்பம்.

மர்மக் குரலுக்குரிய மனிதரைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் காவல் அதிகாரியாக வரும் அஜ்மல், கதாபாத்திரத்துக்குரிய ஆளுமையை நடிப்பில் கொண்டு வந்துவிடுகிறார். ஆனால் அவரது துடிப்புக்குப் போதுமான தீனி கிடைக்கவில்லை. அவருக்குக் கைகொடுக்கும் சக காவல் அதிகாரிகளாக வரும் ஜெய்வந்த், துஷ்யந்த் இருவரும் கவனிக்கவைக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் வரும் ஸ்ரீமன், மதுமிதா, மூணாறு ரமேஷ் உரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மாறுபட்ட கவுரவக் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய பகடியுடன் அலட்டாத நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து, கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்திருக்கிறார்.

பரபரப்பான சாலைகளில் சுழலும் ஜெ.லட்சுமணனின் கேமரா, அதே பரபரப்பைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் பதிவு செய்திருப்பதுதிறமை. அவசியமற்ற நகைச்சுவைக் காட்சிகள், காவல் துறைக்கான போற்றிப் பாடல் ஆகியன இக்களத்துக்கு தொங்கு சதைகள். காவல் கட்டுப்பாட்டு அறையை மையப்படுத்தி, அதனுடன் இன்றைய முக்கியச் சமூகப் பிரச்சினை ஒன்றைப் பரபரவெனத் தொடர்புபடுத்தியிருப்பதைப் பாராட்டலாம். அதற்குத் திரைக்கதையின் நகர்வு, படத்தொகுப்பின் வேகம் ஆகியவை மட்டுமே உண்மையான விறுவிறுப்பைக் கொடுத்துவிட முடியாது. அதைத் தாண்டி படத்தின் இறுதியில் பார்வையாளர்களின் கவனத்துக்குத் தெரிய வரும் அப்பிரச்சினையின் ஆழமும் அரசியலும் பேசப்பட்டிருக்க வேண்டும். அதை இந்தத் தீர்க்கதரிசி தவறவிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE