நடிகர் சரத்பாபு குறித்த வதந்தி - குடும்பத்தினர் கண்டனம்

By செய்திப்பிரிவு

மூத்த தமிழ் நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த மாதம் 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டன.

இந்த நிலையில் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சரத்பாபுவின் பிஆர்ஓ தனது ட்விட்டர் பதிவில், ‘நடிகர் சரத்பாபுவின் உடல்நலம் தேறி வருகிறது. அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE