“மனோபாலா... சமூக பொறுப்புமிக்க படைப்பாளி!” - தமிழக அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: "சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

எடப்பாடி பழனிசாமி: “ மனோபாலா `ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் மனோபாலா, அதிமுகவின் மீதும், தொடர்ந்து கட்சித் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராக கட்சியின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கட்சிப் பணிகளை ஆற்றியவர். தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்.”

விஜயகாந்த்: "எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”

கே.எஸ்.அழகிரி: "பத்திரிகையாளராக தமது வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக இணைந்து, திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மிகச் சிறப்பாக திரைப்படத் துறையில் பங்காற்றிய மனோபாலா காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 20 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி, ஏறத்தாழ 175 திரைப்படங்களில் நடித்துள்ள மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்".

அன்புமணி ராமதாஸ்: "தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்".

ஜி.கே.வாசன்: "தமிழ் சினிமா திரைத்துறையில் இயக்குநராக, நடிகராக, படத் தாயாரிப்பளராக, சிறந்த வசனகர்தாவாக பன்முகத் தன்மை கொண்ட மனோபாலா, பல்வேறு திரைப்படங்களை இயக்கியும், நகைச்சுவை மற்றும்; குணச்சித்திர வேடங்களில் நடித்தும், தமிழ்மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர். சின்னத்திரையிலும் பல சீரியல்களையும் இயக்கி எல்லோர் மனதிலும் நிறைந்தவர்".

டிடிவி தினகரன்: "உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர் மனோபாலா. அவரின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்".

சீமான்: "எங்கள் அப்பா பாரதிராஜாவின் பாசறையிலிருந்து வந்தாலும் தனக்கென தனித்துவமான பாணியை வகுத்துக்கொண்ட வெற்றிகரமான இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்த அவருடைய இழப்பென்பது தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்".

சரத்குமார்: "1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தை இயக்கி, கலைப்பயணத்தை துவங்கிய அவரது மொத்த இயக்க படங்கள் 24–இல் நான் நடித்த ‘வெற்றிப்படிகள்’ திரைப்படமும் ஒன்று. நட்புக்காக, சமுத்திரம், திவான், காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், வைத்தீஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை இப்போது நினைவுகூர்கிறேன். தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

திருநாவுக்கரசர்: "திரையுலகில் இயக்குனா் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்து அனுபவம் பெற்று பல படங்களை இயக்கியும், நடிகராக பல படங்களில் நடித்தும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பொியவர்கள் வரை அனைவாின் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்தவா். மிகவும் இயல்பானவா். அனைவாிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர் மனோபாலா. அன்னாாின் மறைவு திரையுலகிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் இழப்பாகும்".

செல்வப்பெருந்தகை: "தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையால் வளர்ச்சியடைந்தவர். காமெடி நடிப்பில் வெகு இயல்பாக நடிக்கக் கூடியவர். இவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கவை. இவருடைய இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு". | வாசிக்க > புகழஞ்சலி: 90ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை யாவரையும் மகிழ்வித்த மகத்தான திரைக் கலைஞர் மனோபாலா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE