“எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர்”, “எல்லாருக்காகவும் முன் நின்றவர்”, “அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர்” என்று மனோபாலாவுக்கு தமிழ்த் திரையுலகினர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்: “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.”
நடிகர் கமல்ஹாசன்: “இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
» “அருமை நண்பர்...” - மனோபாலா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
» இயக்குநரும், நடிகருமான மனோபாலா காலமானார் - சோகத்தில் திரையுலகம்
நடிகர் விஜயகாந்த்: “எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”
நடிகர் சரத்குமார்: “தமிழ்த் திரைப்பட இயக்குனரும், நடிகரும், அருமை நண்பருமான மனோபாலா உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 1982-ல் ‘ஆகாய கங்கை’ திரைப்படத்தை இயக்கி, கலைப்பயணத்தை துவங்கிய அவரது மொத்த இயக்க படங்கள் 24–இல் நான் நடித்த ‘வெற்றிப்படிகள்’ திரைப்படமும் ஒன்று. நட்புக்காக, சமுத்திரம், திவான், காஞ்சனா, சென்னையில் ஒரு நாள், வைத்தீஸ்வரன் உட்பட பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்களை இப்போது நினைவுகூர்கிறேன்.
தமிழ்த் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து, ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி பிரிந்திருக்கும் மனோபாலாவின் மறைவால் வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
இயக்குநர் டி.ராஜேந்தர்: “இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
இயக்குநர் பாரதிராஜா: “என் மாணவன் மனோபாலா மறைவு, எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.”
நடிகர் தம்பி ராமையா: “மனோபாலாவின் இழப்பு, மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.”
நடிகர் கவுதம் கார்த்திக்: “மனோபாலா நம்மோடு இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்கியது. உங்களோடு பணியாற்றியது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தது. நிச்சயமாக உங்களை மிஸ் செய்வோம்.”
நடிகர் சிங்கமுத்து: “மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லாருக்காகவும் முன்நின்றவர் அவர்.”
நடிகர் கார்த்தி: “இந்தச் செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா இடங்களிலும் எல்லாருக்காகவும் இருந்த ஒரு மனிதர். உங்களை மிஸ் செய்கிறேன் மனோபாலா.”
இயக்குநர் சேரன்: “தாங்க முடியாத செய்தி. மனதை உலுக்கி எடுக்கிறது. நான் பெற்ற உங்கள் அன்பு மறக்க முடியாதது. போய் வாருங்கள் மாமா.”
கவிஞர் சினேகன்: ”இயக்குநர், எழுத்தாளர், நடிகர் மாமனிதர் அண்ணன் மனோபாலாவின் மறைவு என்பது மனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் இழப்பாகவே நீள்கிறது. தம்பி என்று அவர் அழைக்கும்போது ஒரு தாய்மையின் உணர்வு தலைத்தூக்கி நிற்கும். மரணம் சில நேரங்களில் இப்படிதான் தவறு செய்துவிடுகிறது.”
குஷ்பு: “அற்புதமான நடிகர்/இயக்குநர் மனோபாலாவின் மறைவு அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது. அவர் மிகச்சிறந்த மனிதர். எப்போதும் சுறுசுறுப்பாகவும் மற்றவர்கள் உதவும் எண்ணமும் கொண்டவர். சினிமாவில் அவரது பங்கு மகத்தானது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.”
சூரி: “திறமையான இயக்குநர், கனிவான தயாரிப்பாளர், அருமையான நடிகர், அனைவருக்கும் பிடித்த மிகச்சிறந்த மனிதர் மனோபாலா அவர்கள் இறப்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்துக்கும் பேரிழப்பு.”
பி.வாசு: “இதயத்திற்கு நெருக்கமான ஒருவரை நான் இழந்திருக்கிறேன். விவேக், மயில்சாமி, இன்று மனோபாலா. மிகச் சிறந்த நடிகர், இயக்குநர் மனோபாலா. அவர் இறந்த செய்தி கேட்டதும் என் உடல் உறைந்துவிட்டது. அண்மையில் தான் நானும் மனோபாலாவும் கோயம்புத்தூர் சென்றோம். அவருடன் இருக்கும்போது சிரிக்க வைத்துக்கொண்டேயிருப்பார். மனோபாலாவை பிடிக்காது என யாரும் சொல்லமாட்டார்கள். அவருக்கு என் அஞ்சலிகள்.”
மேலும், நடிகர் விஜய் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஆர்யா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பயணம்: 1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமான மனோபாலா அப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’ என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகின.
விவேக் உடன் ஒரு படத்தில் அவர் பேசிய ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற வசனம் டிரேட் மார்க் ஆனது. நடிப்பு தவிர்த்து ஏராளமான படங்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், கார்த்திக் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago