“பொ.செ 2 அட்டகாசம்” - சென்னை வந்து படம் பார்த்த பின் கார்த்தியை சந்தித்த ஜப்பான் ரசிகை

By செய்திப்பிரிவு

ஜப்பானைச் சேர்ந்த நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை ஒருவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். பின்னர், நடிகர் கார்த்தியையும் நேரில் சந்தித்துப் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தினை பார்ப்பதற்காக நடிகர் கார்த்தியின் ரசிகை ஒருவர் ஜப்பானிலிருந்து சென்னை வந்துள்ளார். ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை (Terumi Kakubari Fujieda ) நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு விருந்து பரிமாறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா (Terumi Kakubari Fujieda ) கூறுகையில், “நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன். அப்போதிலிருந்து, நான் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகை. ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை பார்த்து மிகவும் ரசித்தேன். மிக அட்டகாசமான படம்” என்றார்.

நடிகர் கார்த்தியுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், “ஜப்பான் பட பிடிப்பில் மிக பிஸியான நேரத்தில் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டு என்னை வீட்டுக்கு அழைத்தார். அவர் மனைவி கேசரி பரிமாறினார். மிக எளிமையாக என்னிடம் பழகினார். அவருடன் பல விஷயங்கள் உரையாடினேன். ‘ஆர்ஆர்ஆர்’ படம் போல் இந்தப் படத்தையும் ஜப்பானில் பிரமாண்டமாக வெளியிடுமாறு கேட்டேன். ஜப்பானில் தமிழ்ப் படங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது படக்குழுவை ஜப்பான் அழைத்து வரக் கோரிக்கை வைத்திருக்கிறேன். கார்த்தியின் அடுத்த படம் ‘ஜப்பான்’ என்றபோது ஆச்சர்யப்பட்டேன். ஆனால், அது ஜப்பான் பற்றிய படமல்ல, ஜப்பான் எனும் பெயர் மட்டுமே என்றபோது கொஞ்சம் வருத்தம்தான். ஜப்பான் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஜப்பானை வைத்து தமிழ் படங்கள் வர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE