டுவேய்ன் ஜான்சன் பிறந்தநாள் | ஹாலிவுட்டை கலக்கும் முன்னாள் மல்யுத்த வீரன்

By செய்திப்பிரிவு

தி ராக் - 90களில் வளர்ந்தவர்களுக்கு இந்த பெயரை தெரியாமல் இருக்க சாத்தியமில்லை. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கும் மேலாக WWF (தற்போது WWE) மல்யுத்த உலகை கலக்கிய பெயர் இது. இதே பெயர் தான் தற்போது ஹாலிவுட்டின் அதிகம் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக மாறி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

மற்ற துறைகளில் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் திரைத் துறைக்கும் நுழைவது அரிதாக நடக்கும் ஒன்று. அப்படியே நுழைந்தாலும் அதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைப்பது என்பது அரிதினும் அரிது. அந்த வகையில் 90களில் மல்யுத்த போட்டிகளில் பத்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா மன்னனாக திகழ்ந்த ‘தி ராக்’, 2001ஆம் ஆண்டு வெளியான ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இன்று உலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.

புகழ்பெற்ற மல்யுத்த வீரரான தனது தந்தையின் ராக்கி ஜான்ஸன் என்ற பெயரிலிருந்து ‘ராக்கி’ என்ற வார்த்தையையும், தனது தாத்தா பீட்டர் மால்வியாவிடமிருந்து ‘மால்வியா’ என்ற பெயரையும் உருவி ‘ராக்கி மால்வியா’ என்ற பெயருடன் 1996ஆம் ஆண்டு WWF உலகினுள் அடியெடுத்து வைத்தார் ‘தி ராக்’. அவரது இயற்பெயர் டுவேய்ன் ஜான்சன்.

மல்யுத்த மேடைகளில் தி ராக் செய்யும் சில ஸ்டைலிஷ் சேஷ்டைகள் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாகின. மூக்குக் கண்ணாடியை கீழே இறக்கி, ஒற்றை புருவத்தை தூக்கி முறைப்பது, எதிராளியை நோக்கி நான்கு விரல்களை காட்டி சண்டைக்கு அழைப்பது போன்ற செய்கைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. அவரது இந்த தனித்துவமான பாணியே ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்று தந்தது. தி மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு சிறிய அதே நேரம் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு கொடுக்கப்பட்ட தொகை 5 மில்லியன் டாலர்கள்.

அந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து அதே பெயரில் ‘தி ஸ்கார்பியன் கிங்’ என்ற படத்தில் 2002ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகனார் டுவேய்ன் ஜான்சன். இப்படம் மூலம் ஜான்சனின் பாதை முற்றிலுமாக சினிமாவை நோக்கி மாறியது. அதன் பிறகு ‘தி வாக்கிங் டால்’, ‘டூம்’, ’தி ரன் டவுன்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தாலும், எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஜான்சனின் திரை வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும் நிலை ஏற்பட்டதால், அவ்வப்போது மீண்டும் WWE போட்டிகளில் தலைகாட்டி வந்தார்.

எனினும் 2011ஆம் ஆண்டு வெளியான ‘ஃபாஸ்ட் ஃபைவ்’ திரைப்படம்தான் ஜான்சனின் திரைப்பயணத்தின் முதல் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியாக அமைந்தது. அது வரை பலவகையான ரோல்களில் ஆர்வம் காட்டி வந்த அவர், அதன் பிறகு ஆக்‌ஷன் படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த ‘ஜர்னி 2’, ‘ஸ்னிட்ச்’, ‘‘ஹெர்குலஸ்’ என அனைத்து படங்களும் உலக அளவில் ஹிட்டடித்தன. ஆக்‌ஷன் கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தாலும், இடையிடையே ‘மோனா’ (அனிமேஷன்), ‘ஜுமான்ஜி’ போன்ற ஃபேமிலி திரைப்படங்கள் மூலமும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

புகழ்பெற்ற காமிக்ஸ் வில்லனான ’பிளாக் ஆடம்’ கதாபாத்திரத்தின் மூலம் தற்போது டிசி உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் டுவேய்ன் ஜான்சன். கடந்த ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 393 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து, துவண்டு கிடந்த டிசி ரசிகர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளது. இனி வரும் டிசி படங்கள் அனைத்தும் இந்த ‘பிளாக் ஆடம்’ கதாபாத்திரத்தை சுற்றியே எழுதப்படலாம் என்று தெரிகிறது.

மல்யுத்த வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று ஹாலிவுட்டில் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் நடிகராக மாறிய டுவேய்ன் ஜான்சன் உலகம் முழுவதும் உள்ள தன் ரசிகர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார்.

இன்று (மே 2) டுவேய்ன் ஜான்சன் பிறந்தநாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE