ரஜினிகாந்த் மீது ஆந்திர மக்கள் கோபத்தோடு இருக்கிறார்கள்: நடிகை ரோஜா

By அ.முன்னடியான்

புதுச்சேரி: சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகப் பேசியதால் ஆந்திர மக்கள் ரஜினிகாந்த் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 3-ம் தேதி வரை நடைபெறும் ஆதி புஷ்கரணி விழாவின் 9-வது நாளான இன்றைய விழாவில் புதுச்சேரி, தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா மாலையில் திருக்காஞ்சி வந்தார். அவர் சங்கராபரணி ஆற்றிங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், சந்திரபிரியங்கா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 12 வருடத்துக்கு ஒருமுறை வருகின்ற கங்கா ஆரத்தியை சந்தோஷமாக பார்க்க முடிந்தது. காசியில் தான் பார்த்துள்ளோம். ஆனால் புதுச்சேரியில் காசிக்கு நிகரான பவித்திரமான இந்த ஸ்தலத்தில் பார்த்துள்ளேன். சரியான நேரத்தில் கடவுள் என்னை வரவழைத்து ஆசீர்வாதம் கொடுத்தள்ளது மிகுந்த சந்தோஷம்.

ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என்று நினைத்துவிட்டார். வேண்டாம் என்று நினைத்தபிறகு அரசியல் பேசக்கூடாது. என்டி ராமராவை எல்லோரும் கடவுளாக பார்ப்பார்கள். அவரை எப்படி கொன்றார்கள், அவரது மரணத்திற்கு காரணம் யார் என்பது ரஜினிகாந்துக்கு தெரியும். நான் நினைத்தேன் ரஜினிகாந்த் தெரியாமல் தவறாக பேசிவிட்டார் என்று. ஆனால் தெரிந்தே தவறாக பேசியுள்ளார் என்பது தான் கஷ்டமாக இருக்கிறது. தெலுங்கர்கள் ரஜினிகாந்தை ஒரு சூப்பர் ஸ்டாராக, நல்ல நடிகராக பார்த்தனர். ஆனால் அவர் பேசியதை பார்த்து அனைவரும் கோபத்தோடு இருக்கின்றனர்.

ஏனென்றால் என்டி ராமாராவை யார் கொலை செய்ய திட்டம் போட்டாரோ அவரை நல்லவர் என்று சொன்னது மட்டுமின்றி, மேலே இருந்து ஆசி வழங்குவார் என்று சொன்னது பெரிய தவறு. அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பம் இல்லாதபோது தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு அழைத்தார், சாப்பாடு போட்டார், ஒரு ஸ்கிரிப்டை கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்டை படித்துவிட்டு சொல்வது என்பது சரியல்ல. ரஜினிகாந்த் என்றால் பெரிய அளவில் பார்த்தோம். ஆனால் இன்று அவர் ஜீரோவாக ஆகிவிட்டார்.

இனிமேல் எந்த நடிகரும் ஒரு மாநிங்கலத்துக்கு செல்லும்போது, அந்த மாநிலம் குறித்து தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் அமைதியாக வந்துவிடுவது நல்லது. ரஜினிகாந்த் அரசியலில் இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அரசியலுக்கு வரப்போவதில்லை. இனி நிற்கவும் போவதில்லை. எனவே அவர் தெரிந்து பேசினாரோ, தெரியாமல் பேசினாரோ, ஆனால் பேசிவிட்டார்.

இதனால் அவர் இவ்வளவு நாட்களாக வாங்கிய நல்லப்பெயர் அனைத்தும் சரிந்து வருகிறது. அதனை தெரிந்துகொண்டு அறிக்கை ஒன்றை அளித்தால் அவருக்கு நல்லது. ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்வரை எங்கும் பார்க்க முடியாது. அவர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். கல்வி, சுகாதாரம் இலவசமாக வழங்குகிறார். அவர் தான் எல்லோருக்கும் ஒரு அண்ணன், தம்பி.

வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். அதனால் தான் ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் இப்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று வருகிறது. 2024-ல் கூட அதேதான் நடக்கும். ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு முதலில் பவன் கல்யாணை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும் முடியவில்லை. இப்போது ரஜினிகாந்தை இழுக்கப் பார்க்கிறார். அதனை ரஜினிகாந்த் தெரிந்துகொண்டால் நல்லது. யார் சேர்ந்து வந்தாலும், தனித்னியே வந்தாலும் ஜெயன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் மனதில் அவர் தான் இருக்கின்றார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE