சிந்து சமவெளி நாகரீகம் குறித்து திரைப்படம் எடுக்க ராஜமௌலிக்கு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை

By செய்திப்பிரிவு

சிந்து சமவெளி நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை எடுக்குமாறு இயக்குநர் ராஜமௌலிக்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் மிகவும் தொன்மை வாய்ந்த நாகரீகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரீகம். இது இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதி ஆகிய பகுதிகளில் சுமார் 10 லட்சம் சதுர கிலோமீட்டர் பரவியிருந்த ஒரு நாகரீகம் . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் கட்டடக்கலை, அறிவியல், இலக்கியம், நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஒரு நீண்ட பதிவை (Thread) ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அத்துடன் இயக்குநர் ராஜமௌலிக்கு ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘சிந்து சமவெளி காலகட்டம் தொடர்பாக ஒரு திரைப்படத்தை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு இயக்குநர் ராஜமௌலிக்கு கோரிக்கை விடுக்கிறேன். அது தொன்மை வாய்ந்த இந்த நாகரீகம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ராஜமௌலி, ‘ஆமாம் சார், ‘மகதீரா’ படத்துக்காக தோலவிரா பகுதியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த போது, புதைபடிவமாக மாறியிருந்த ஒரு பழமையான மரத்தை நான் பார்த்தேன். சிந்து சமவெளி நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரம் கூறுவது போல ஒரு கதையை யோசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்றபோது, மொஹஞ்சதாரோ பகுதிக்குச் செல்ல முயற்சித்தேன். ஆனால் சோகம் என்னவென்றால், எனக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என்று ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE