சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை சக்சஸாக்கிய 'டார்க் டெவில்' அஜித்!

By குமார் துரைக்கண்ணு

சினிமா எப்போதும் தன்னை இளமையாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. தன்னை செலவழித்துக் கொண்டாடித் தீர்க்கும் ஒரு பெருங்கூட்டத்தில் முக்கால்வாசி பேர் இளையோர் என்பதை நன்கறிந்து வைத்திருக்கிறது சினிமா. இந்த விருப்பம்தான், சினிமா ஹீரோக்களுக்கான, இளைய பட்டாளத்தின் ஆதர்ச நாயகர்களுக்கான டெம்ப்ளேட்டுகளை உருவாக்க அடிப்படை காரணங்களாக இருந்து வருகிறது. பொதுவாகவே சினிமா நாயகர்கள் ஒரு படத்திற்காக தங்களை தயார்படுத்திக் கொள்வது என்பதைத்தாண்டி, திரையுலகில் இருக்கும்வரை தங்களது உடல்சார்ந்த சில விசயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பர். இதில் உடற்கட்டு, தலைமுடி, மீசை, நிறம் உள்ளிட்டவைகளின் பராமரிப்பு மிகவும் முக்கியமானது.

சினிமா ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நாயகனை வியந்து மகிழ, அவர்களது ஹுரோவின் ஹேர் ஸ்டைல்கூட போதுமானது. தமிழ் திரை உலகில் இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. முடிகொட்டிய காரணத்தால் மார்க்கெட் போனவர்களும் இங்கு உண்டு. என்னதான் 'விக்' வைத்து அந்த குறையை சரி செய்தாலும் எளிமையும் உண்மையும் கலந்த அந்த நிஜத்துக்கு முன் போலி தோற்றுவிடும். ஆனால், என்ன செய்வது இது சினிமா? ஹுரோவின் லட்சோப லட்சம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், வேறு வழியில்லை அதனால்தான் என்று 'விக்' வைத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றி காண்பவர்களும் உண்டு.

தலைமுடிக் கொட்டி வழுக்கை விழுவது ஒருபுறமென்றால், தலைமுடி நரைத்துப்போவது இன்னொருபுறம். ஹுரோயின்கள் உடல் எடை அதிகரித்தால் படவாய்ப்புகள் குறைந்து போவது போன்றது ஹுரோவுக்கு தலைமுடி சார்ந்த பிரச்சினைகள். சினிமாவின் எழுதப்பட்ட இந்த சட்ட விதிகளைத் திருத்தி எழுதியவர் நடிகர் அஜித்குமார் என்பதே நிதர்சனம். சினிமாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறையாமல் இருப்பதற்கு காரணம் அதன் ரசிகர்கள்தான். சினிமாவும் சரி ஒரு ஹுரோவும் சரி, தனக்கான ஒரு கூட்டத்தை ஈர்க்கும்வரைதான். அதை அடைந்துவிட்டால் போதும் எல்லாமே சுமூகமாகிவிடும்.

தனது அபரிமிதமான ரசிகர் பட்டாளத்துக்காக சினிமா, ஹுரோக்களின் தலைமுடியில்கூட சமரசம் செய்துகொள்வதில்லை. ஒரு ஹுரோவின் தலைமுடி கருப்பில்தான் அப்படத்தின் வெற்றி படிந்திருக்கிறதென அது தீர்க்கமாக நம்பியது. பல ஆண்டுகளாக நீடித்த அந்த மூடநம்பிக்கையை வெள்ளிக்கம்பிகளாய் வளர்ந்திருந்த நரைமுடியுடன் நடித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித். 2007 முதல் 2010 வரை ஆழ்வார், கிரீடம், பில்லா, அசல், ஏகன் என அவர் நடித்திருந்த 5 படங்களில் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மற்ற திரைப்படங்கள் பெரிதாக போகவில்லை.

2011ல் கருப்பு வெள்ளை (சால்ட் அண்ட் பெப்பர்) கலந்த தலைமுடியுடன், மீசையை மழித்து விநாயக் மாதவனாக அஜித் இறங்கி அடித்தாடிய படம்தான் 'மங்காத்தா'. அந்தப்படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சியும், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அதுவரை தலைமுடி பிரச்சினையால் இருண்டு கிடந்த பலரது வாழ்க்கையில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹுரோ உருவாக்கத்துக்கு இப்படத்தில் வரும் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலுடன் கூடிய தோற்றம் புதிய ரெஃபரன்ஸை உருவாக்கியது. விளைவு பாக்ஸ் ஆபிஸின் ஓபனிங் வசூலில் அதுவரை முதலிடத்தில் இருந்து வந்த எந்திரன் படத்திற்கு அடுத்த இடத்தைப் பிடித்தது மங்காத்தா. அந்தப் படத்தின் கதை, பாடல்கள், நடிகர் நடிகைகள், இயக்கம் என அனைத்தும் கடந்து பேசுபொருளாக நீண்டது அஜித்தின் ஹேர்ஸ்டைல்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் 2012ல் வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் தமிழ் டப்பிங்கில் கவுரவ வேடத்தில் இதே தோற்றத்தில் அஜித் நடித்திருப்பார். அவருக்காகவே அந்தப்படத்தை பார்த்தவர்கள் ஏராளம். சரி அவ்வளவுதான் அஜித் இனி வழக்கம்போல கருப்பு நிற தலைமுடிக்கு மாறிவிடுவார் என்பதை 2013ல் வெளிவந்த ஆரம்பம் திரைப்படத்தின் வெற்றி உறுதி செய்தது. எத்தனை பேரை பார்த்திருக்கோம், ஒருபடம் ஓடிவிட்டால், நரைமுடியெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். மறுபடியும் நம்ம பாஃர்முலாவுக்கு வந்தே ஆகனும் எனும் இருமாப்புக் கொண்டது சினிமா.

இந்த இருமாப்பு கொஞ்சநாள்கூட நிலைக்கவில்லை. வெள்ளை வேட்டி சட்டையுடன் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கையில் டீ டம்ளருடன் உட்கார்ந்திருக்கும் வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. 2014 பொங்கலுக்கு வெளியாகப் போகும் அந்தப்படத்தின் வெற்றியை அந்த பர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே கொண்டாடத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். கையில் ஆயுதங்களுடன் துரத்திவருபவர்களுக்கு முன் முகத்தில் சிறிய ரத்தக்காயத்துடன், கருப்புவெள்ளை தலைமுடியுடன் வேட்டி சட்டை சகிதமாக அவதரிக்கும் வகையில் வெளியான அப்படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது. அந்தப்படமும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப்பிறகு அஜித்தின் நரைமுடி அதிகரிக்கத் தொடங்கியது. அவரும்சரி அவரது அடுத்தடுத்தப் படங்களை இயக்கிய இயக்குநர்களையும் அஜித்தின் அந்த உண்மையான ஹேர்ஸ்டைல் அவரது எண்ணிலடங்கா ரசிகர்களைப் போலவே வெகுவாக ஈர்த்திருந்தது. இதனால் 2015ல் வெளியான என்னை அறிந்தால், வேதாளம் படங்களிலும் அதேபோல் அஜித் நடித்தார். இப்போது நரைத்த முடியுடன் கூடிய அஜித்தின் தோற்றம் ரசிகர்களின் மனதில் வேரூன்றிப் போயிருந்தது. 2017ல் அதே ஹேர்ஸ்டைலுடன் வந்த விவேகம் திரைப்படத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையானத் தோற்றத்தில் நடித்திருப்பார் அஜித். இதற்கு அவரது நிறமும் பிரதான காரணமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து அதே ஆண்டு மீண்டும் வேட்டி சட்டை வெள்ளைத் தலைமுடியுடன் தூக்குதுரையாக விஸ்வாசம் மூலம் தமிழக கிராமங்களுக்குள் வலம் வந்த அஜித்தை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். இந்தப்படமும் அவரது சினிமா வாழ்க்கையில் பிளாக்பஸ்டராக அமைந்தது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2019ல் பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் அஜித் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாக சராசரி வசலை அள்ளியது. இதையடுத்து 2022ல் வலிமை திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் ஹேர்ஸ்டைல் கலரிங் செய்து இளமையாகத் தோன்றினார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கில் கல்லாக்கட்டியது. அஜித் நடிப்பில் இறுதியாக வந்த படத்தில் கிரீன் கார்கோஸ், ஒயிட் ஷர்ட் சகிதமாக முழுக்க நரைத்த தலைமுடியுடன் டார்க் டெவிலாக ஆட்டம் போடும் அஜித்தின் டான்ஸால் ஆடிப்போனது கோலிவுட். தலைமுடி நரைத்தப்பிறகு, நின்னு நிறுத்தி நிதானமாக ஆடிய அஜித்தின் ஸ்டைலீஷான ஆட்டம் எல்லோரையும் வியக்கவைத்தது.

தனது திரைப்பயணத்தின் தொடக்கம் முதலே அஜித் பல தோல்விகளைக் கண்டவர். திரையுலக பின்புலம் எதுவும் இல்லாமல் தனக்கான இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர். தனது புகழை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருபவர். இவையெல்லாம் அவசியமென்ற பல சினிமா பாஃர்மேட்டுக்குள் அடைக்கமுடியாதவர். ஆனாலும் அவரது படங்களின் ஓபனிங் வசூல் இன்றளவும் குறையவே இல்லை. அஜித்தின் இந்த வலிமையும் துணிவும்தான், தலைமுடியும் அதன் நிறமும் தன் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்காது என்று வீரத்துடன் அவரை பயணிக்க வைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE