‘வாலி’, ‘முகவரி’ உள்ளிட்ட அஜித் படங்களின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காலமானார்

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பல படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 55.

நடிகர் அஜித் குமாரின் ஆரம்ப காலக்கட்டத்தில் அவரது படங்களை தயாரித்தவர் ‘நிக் ஆர்ட்ஸ்’ எஸ்.எஸ்.சக்ரவர்த்தி. அஜித் நடிப்பில் வெளியான ‘ராசி’, ‘வாலி’, ‘முகவரி’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’, ‘ஆஞ்சநேயா’, ‘ஜீ’, ‘வரலாறு’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். சிம்பு நடிப்பில் வெளியான ‘காளை’, ‘வாலு’, விக்ரம் நடித்த 'காதல் சடுகுடு' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர் சக்ரவர்த்தி.

இவர் தனது மகன் ஜான் கதாநாயகனாக நடித்த 'ரேணிகுண்டா' படத்தை தயாரித்தார். இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் தனது மகனை வைத்து '18 வயது' என்ற படத்தை தயாரித்தார். இப்படம் வெற்றி பெறவில்லை. நடிகர் சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட 'வேட்டை மன்னன்' படம் நிதிச் சிக்கல் காரணமாக முடங்கியது. இதனால், சினிமாவில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சில காலம் விலகியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்த எஸ்.எஸ்.சக்ரவர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 55. அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு திரைத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதியாக நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ படத்தில் காவல் துறை அதிகாரியாக சக்ரவர்த்தி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE