பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்று (ஏப்.28) உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை சட்டவிரோதமாக 3888 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் தரப்பில் மிகுந்த பொருட்செலவில் இந்தப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். | வாசிக்க > பொன்னியின் செல்வன் 2 Review: காதல் களத்துடன் ஈர்க்கும் மணிரத்னத்தின் ‘புனைவு’!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE