பொன்னியின் செல்வன் 2 Review: காதல் களத்துடன் ஈர்க்கும் மணிரத்னத்தின் ‘புனைவு’!

By கலிலுல்லா

கடல் சீற்றத்தில் சிக்கிய அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) உயிரிழந்துவிட்டதாக சோழர்களுக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், எப்போதும்போல அருண்மொழி வர்மனை ஊமைராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றிவிடுகிறார். உயிர்பிழைத்தாலும் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளவரசனை வந்தியத்தேவனும் (கார்த்தி) பூங்குழலியும் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) மீட்டு நாகப்பட்டினத்தில் உள்ள புத்த மடத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்கின்றனர். அருண்மொழி வர்மன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்ட பாண்டிய ஆபத்துதவிகள் சுந்தரச் சோழரையும் (பிரகாஷ்ராஜ்), அவரது மகன்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்து நந்தினியின் வழிகாட்டுதலில் சதித்திட்டம் தீட்ட, இறுதியில் சோழர்கள் மூவரும் கொல்லப்பட்டனரா? பட்டத்து இளவரசனாக அருண்மொழி வர்மன் முடிசூடப்பட்டாரா? - இதுதான் திரைக்கதை.

பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகள், துரோகங்கள், சதிவலைகளையெல்லாவற்றையும் கடந்து படம் முடிந்து நமக்குள் தேங்கிவிடுகிறது ஆதித்த கரிகாலன் - நந்தினியின் அந்தக் காதல். உண்மையில் காதல் காட்சிகளில் மணிரத்னத்தின் அழகியல் தனித்துவமானது. பிரமாண்ட கடம்பூர் மாளிகையின் ஒளிவிளக்குகள் சூழ்ந்த அந்த அறையில் வாளுடன் நிற்கும் நந்தினியிடம் தன் உயிரை துச்சமென எண்ணி கரிகாலன் பேசும் காட்சியும், அதற்காக ரவிவர்மன் கேமரா தூரிகையால் தீட்டியிருக்கும் ரம்மியமான ஃப்ரேமும், பின்னணியில் ‘சின்னஞ் சிறு நிலவே’ பாடலின் கோரஸும் அற்புதமானவை.

கடந்த பாகத்தில் இளவரசன் அருண்மொழி வர்மன் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இந்தப் பாகத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல் நிரம்பியிருக்கிறது. புதினத்தில் இடம்பெற்றிருப்பதைப் போல ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை ஒருவித சஸ்பென்ஸுடனே பதிவு செய்திருக்கிறார் மணிரத்னம்.

படத்தின் தொடக்கமே இளவரசனுக்கும் (ஆதித்த கரிகாலன்) கைவிடப்பட்ட பெண்ணுக்கும் (நந்தினி) இடையேயான காதல் அதீத வசனமில்லாமல் பின்னணி இசையுடன் காட்சிமொழியில் விவரிக்கப்படும் விதமும், அந்தக் காதலின் பிரிவை காட்சிப்படுத்தியிருந்த விதம் ஈர்ப்பு. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் மற்ற கதாபாத்திரங்களை எளிதில் மறக்கடித்துவிடுகிறது.

படத்தின் முதல் பாதி அதீத உரையாடல்களுடன் நீள, விக்ரம் - ஐஸ்வர்யா ராய், கார்த்தி - த்ரிஷாவுக்கான காதல் போர்ஷன், கார்த்தி - ஜெய்ராம் இடையிலான காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாமல் நகர்கிறது. அழுத்தமான காதலும், எமோஷனலும் இரண்டாம் பாதிக்கு பலம். நந்தினியின் பின்புலக்கதை, சோழர்களை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சிகள், ஊமைராணியின் விவரிப்பு, வீரபாண்டியனுக்கும் (நாசர்) நந்தினிக்குமான உறவு உள்ளிட்டவை ஆர்வமூட்டினாலும், முழுமையில்லாமல் அடுத்தடுத்து ‘ஜம்ப்’ஆகும் காட்சிகள், நினைவில் நிற்க போராடும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் சிக்கல். நாவலில் கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் படத்தில் உயிரோடு வருவதும், புனையப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சியும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்கான மணிரத்னத்தின் புனைவுகள்.

ஆதித்த கரிகாலனாக ஆற்றாமை, கோபம், இழந்த காதலின் வலி, ஆக்ரோஷம் என விக்ரமும், பழிவாங்கும் வெறி, துரோகம், தவிப்பு என நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிப்பில் தனித்து தெரிகின்றனர். ஜாலியான கதாபாத்திரமாக இருந்தாலும், தன் இளவரசனை காக்க தவறிய குற்ற உணர்ச்சியில் கலங்கும் இடத்தில் வந்தியதேவனாக ஸ்கோர் செய்கிறார் கார்த்தி.

பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் வெளிப்படுத்தாத காதல், சோழ சாம்ராஜியத்தையும், சகோதரர்களையும் காக்க வேண்டிய பொறுப்பில் குந்தவையாக த்ரிஷா கவனம் பெறுகிறார். முந்தைய பாகத்தில் அருண்மொழி வர்மனாக ஈர்த்த ஜெயம் ரவி போர்க் காட்சிகளிலும், க்ளைமாக்ஸிலும் முத்திரைப் பதிக்கிறார். ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை தேடும் ரசிகர்கள் கண்களுக்கு இந்தப் பாகத்தில் ஏமாற்றம். மற்ற நடிகர்கள் தங்களுக்கான கதாபாத்திர தேவையை உணர்த்து உழைப்பை கொட்டியுள்ளனர்.

‘அக நக’, ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் தேவையான அளவில் தூவி, பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் தடம் பதிக்கிறார். ரவிவர்மன் தன்னுடைய லென்ஸ் எனும் தூரிகையால் திரையில் வண்ணம் தீட்ட அதனை ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் சரிவிகித கலவையாக்கியிருக்கிறார்.

முதல் பாகத்திலிருந்து சிகை அலங்காரம், பிரமாண்ட செட் அமைப்புகள், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அப்படியே இதிலும் தொடர்கின்றன. மொத்தத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆதித்த கரிகாலனுக்கும் - நந்தினிக்குமானது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்