மலையாள சினிமா ‘மாஸ்’ பாதையில் பிரித்விராஜ் தான் கிங்... ஏன்? - ஓர் அலசல்

By கலிலுல்லா

மலையாள படங்கள் ‘கன்டென்ட்’களை நோக்கி வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கின்றன. ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ தொடங்கி ரீசன்ட் ஹிட்டடித்த ‘ரோமாஞ்சம்’ என ஒன்லைன் கதையை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி ரசிக்க வைக்க ஒரு பெரிய இயக்குநர் கூட்டமே இயங்கி வருகிறது. கேமராவை தூக்கிக்கொண்டு தங்களைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்புகளையே முதலீடாக்கி மிகக் குறைந்த பட்ஜெட்டில் அட்டகாசமான படங்களை தந்துவிடுகின்றனர். அந்தப் படங்களில் இன்ட்ரோ சாங்ஸ், லவ் சாங்ஸ், சோகப் பாடல், ஐடம் சாங்ஸ், ஹீரோயினை வலிந்து துரத்தி காதலிக்கும் ஹீரோ, அடித்து பறக்கவிடும் சண்டைக் காட்சிகளெல்லாம் இருப்பதில்லை.

நீண்ட காலமாக ஒரே பாதையில் சர்வீஸ் செய்யாமல் ஓடிக்கொண்டிருக்கும் டவுன் பஸ் போல அவர்களின் படங்கள் மெதுவாக்கத்தான் போகும். ஆனால், அந்த பேருந்துகளில் ஒலிக்கும் ‘இளையராஜா’ பாடலும், ஜன்னல் ஓர இருக்கையின் ரம்மியத்தைப்போல காட்சிகளிலும், திரைக்கதையிலும் ரசிக்க வைத்துவிடுவார்கள். இது மலையாள சினிமாவின் தனித்தன்மையாக பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களை ஓடிடி வாயிலாக நாடே கொண்டாடித் தீர்த்தாலும், திருநல்வேலிகாரர்களுக்கு ‘அல்வா’ சலிப்புத்தட்டுவதைப் போல, இந்த கன்டென்ட் படங்கள் சேட்டன்களுக்கு அயற்சியை கொடுத்திருக்கலாம். அதன் எதிரொலியாக கமர்ஷியல் படங்களான மோகன்லாலின் ‘புலிமுருகன்’, மம்முட்டியின் ‘மதுர ராஜா’ போன்றவை மலையாளத்தின் முதல் ரூ.100 கோடி வசூலித்தன.

அந்த வகையில் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி க்ளப்பை தொடங்கி வைத்தது பிரித்விராஜ் தான். அவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் ரூ.200 கோடியை வசூலித்து அசத்தியது. மலையாள சினிமாவின் பாதையில் கோடிட்டு தனித்தொரு பாதையை உருவாக்கி பயணிக்க நினைப்பவர் பிரித்விராஜ். குறைந்த பட்ஜெட்டுக்குள் சிறுகதை வடிவிலான கதைகளை படமாக்கிக்கொண்டிருக்கும்போது, அரசியல் + மாஸ் + ஆக்ஷன் படங்களின் மூலம் வெகுஜன ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றவர் பிரித்விராஜ். அவர் கையிலெடுக்கும் ‘மாஸ்’ மசாலா படங்களுமே கூட, ஓவர் டோஸாகாமல் குறிப்பிட்ட மீட்டருக்குள் அடங்கியிருப்பதே அதன் வெற்றி.

பான் இந்தியா விரும்பி: பிரித்விராஜை பொறுத்தவரை, 20 வயதிலேயே நடிக்க வந்தவர். கடந்த 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நந்தனம்’ படம் மூலமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தவிர, 2006-ம் ஆண்டு வெளியான ‘வாஸ்தவம்’ (Vaasthavam) படத்திற்காக 24 வயதிலேயே கேரளாவின் மாநில அரசு விருதை பெற்ற கலைஞன். மோகன்லாலுக்கு பிறகு மலையாள சினிமாவில் குறைந்த வயதில் விருது வாங்கியவர் பிரித்விராஜ்தான். (மோகன்லால் தனது 26ஆவது வயதில் மாநில அரசின் விருதை வென்றார்).

ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் தன்னை சுருக்கிக்கொள்ளாத அவர் வெவ்வேறு மொழி சினிமாக்களிலும் தன் நடிப்பை பதிவு செய்தார். மல்லுவுட்டில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்து நாயகனாக மற்ற மொழி சினிமாக்களில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை பிரித்விராஜை சாரும். இதை இன்று துல்கர் சல்மான் செய்யலாம். ஆனால், தான் நடிக்க வந்த 3-ஆவது வருடத்திலேயே ‘கனா கண்டேன்’, ‘பாரிஜாதம்’, ‘மொழி’ என இறங்கி அடித்தவர், தெலுங்கில் ‘போலீஸ் போலீஸ்’, இந்தியில் ‘அய்யா’, ‘ஔரங்கசீப்’ என அவரது மற்ற மொழி பட்டியல் நீளும். சிறிது காலம் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தியவர், தற்போது மீண்டும் மற்ற மொழி சினிமாவில் நடித்து வருகிறார். பிரபாஸின் ‘சலார்’ படத்தில் வில்லனாகவும், இந்தியில் அக்‌ஷய்குமாருடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்தப் புள்ளியிலிருந்து பிரித்விராஜின் பான் இந்தியா விருப்பத்தை அணுகமுடியும். பொதுவாக மலையாள சினிமா கேரள நிலத்திற்குள் தங்களை சுருக்கிக்கொண்டிருக்கும் சூழலில், அதன் பெருமை உலக அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியை முன்னெடுக்கிறார். அண்மையில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ ட்ரெய்லர் இதற்கு சான்று. உலக திரைப்பட விழாக்களில் படம் திரையிடப்பட உள்ளது. அடுத்து அவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாக உள்ள ‘எம்புரான்’ ரூ.400 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக வெளியிடப்பட இருக்கிறது.

தெலுங்கில் ‘ஆர்ஆர்ஆர்’, கன்னடத்தில் ‘கேஜிஎஃப்’, தமிழில், ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் பான் இந்தியாவில் கல்லா கட்டிக்கொண்டிருக்க மலையாளம் அமைதி காத்திருப்பதை பிரித்விராஜ் விரும்பவில்லை. அதற்கான அவரின் தீவிர முன்னெடுப்புதான் ‘எம்புரான்’. மலையாள சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் முதல் பான் இந்தியா படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆக சேட்டகன்கள் கன்டென்டுகளுக்கு மட்டும் பெயர் போனவர்களில்லை. மாறாக, வெகுஜன சினிமாக்களிலும் தடம் பதிப்பவர்கள் என்பதை நிரூபிகும் பிரித்விராஜின் முன்னெடுப்புகள் நிச்சயம் கவனத்தில் கொள்ளத்தக்கவை. வீடியோ வடிவில் காண:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE